சேது சமுத்திரத் திட்ட ஊழியர்களையும் அடித்து உதைத்து இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம்: இந்திய மீனவர்களை இஷ்டத்திற்கு அடிப்பதும், உதைப்பதும், துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்வதுமாக வெறியாட்டம் ஆடி வரும் சிங்கள கடற்படையினர் தற்போது சேது சமுத்திரத் திட்ட ஊழியர்களையே அடித்து உதைத்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
இலங்கை கடற்படையினரின் ரவுடித்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பில் உள்ள இந்திய அரசும், இந்திய கடற்படையும் இதுகுறித்து கண்டு கொள்வதே இல்லை.
தமிழக மீனவர்கள் தாங்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் காட்டுக் கத்தல் கத்தியும் கூட யாரும் கவலைப்படுவது போலத் தெரியவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் சேது சமுத்திரத் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களையே இலங்கைக் கடற்படையினர் வெறித் தனமாகதாக்கி விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுப் பாதை அமைப்பது குறித்து ஆய்வு நடத்த, தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நாகப்பட்டினம், ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்பட 8 இடங்களில் மிதவைக் கருவிகள் மிதக்க விடப்பட்டுள்ளன.
இந்த மிதவைக் கருவிகளை கண்காணிக்கும் பணிக்காக மீனவர்களிடம் இருந்து 5 விசைப்படகுகளும், 3 நாட்டுப்படகுகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டு ஒவ்வொரு படகுக்கும் 3 பேர் வீதம் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பகுதிக்கு மீனவர்கள் வரக்கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய கடல் எல்லையில் உள்ள 5-ம் தீடை பகுதியில் தங்கச்சிமடம் மைக்கேல்ராஜ் பெர்னாண்டோ என்பவரது நாட்டுப்படகில் பாம்பனை சேர்ந்த ரீகன் (23), அகஸ்டின் (24) ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 5 மணிக்கு அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை அடித்து உதைத்து தாக்கினார்கள்.
மேலும் அந்த படகில் இருந்த கயிறுகளையும், சமையல் பாத்திரங்களையும் எடுத்து கடலில் வீச முயன்றார்கள். அப்போது அவர்கள், நாங்கள் மீனவர்கள் இல்லை. அரசு சார்பில் தட்ப வெப்ப நிலை குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று கூறி, அதற்கான அத்தாட்சி கடிதத்தை எடுத்துக் காட்டினார்கள்.
ஆனால் அந்த கடிதத்தை இலங்கை கடற்படையினர் அலட்சியப்படுத்தியதோடு அவர்களை மீண்டும் தாக்கி விரட்டி விட்டுச் சென்று விட்டனர்.
இந்திய அரசுக்காக ஆய்வுப் பணியில் ஈடுபட்டவர்களையே தாக்கிய சம்பவம், இந்திய கடலோர காவல் படைக்கும், கடற்படைக்கும் சவால் விடுவது போல் அமைந்து இருப்பதால், இதுகுறித்து உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு...
இதுதவிர, நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்களை எச்சரித்தனர்.
பின்னர் 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை முற்றுகையிட்டு மீனவர்களைத் தாக்கினர். வலைகள் உள்ளி்ட கருவிகளை சேதப்படுத்தினர். டீசல் கேன்களையும் தூக்கி கடலில் வீசினர்.












Click it and Unblock the Notifications