கருணாநிதியை விமர்சித்துப் பேச்சு-புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்
புதுச்சேரி: முதல்வர் கருணாநிதியை விமர்சித்துப் பேசியதற்காக புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. ஓம் சக்தி சேகரை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டசபையில் நேற்று ஓம் சக்தி சேகர் பேசுகையில், முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து சேகர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார் சபாநாயகர் ராதாகிருஷ்ணன். இருப்பினும் ஓம் சக்தி சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் கோரினர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரை வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இன்று சபை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் நஜீம் எழுந்து சபாநாயகரிடம், நேற்று அவையில் ஓம் சக்தி சேகர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த துணை சபாநாயகர் ஸ்ரீதரன், சேகர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இதுவரை சேகர் வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்கவில்லை.
மன்னிப்பு கேட்க சபாநாயகர் இருக்கையில் இருந்து உத்தரவு வந்தும் அதை மதிக்காமல் அமர்ந்திருக்கிறார் சேகர். இது சபாநாயகர் பதவிக்கு இழுக்காகும் என்றார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் வைத்திலிங்கம் எழுந்து, ஓம்சக்தி சேகரை சட்ட சபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பரிந்துரை செய்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து அந்த பரிந்துரை குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவுடன் ஓம்சக்தி சேகரை இன்று ஒருநாள் சஸ்பெண்டு செய்வதாக சபாநாயகர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், ஓமலிங்கம் ஆகியோர், சபை செத்துவிட்டது. நாங்கள் சபையை புறக்கணிக்கிறோம் என்று கூறிவிட்டு வெளி நடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications