திருப்பூர்: டாஸ்மாக் கடையில் ரூ 5 லட்சம் திருடிய ஊழியர் கைது
திருப்பூர்: திருப்பூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையில் ரூ 5.32 லட்சம் திருடிய, ஊழியர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், பல்லடம் ரோடு நொச்சிபாளையம் பிரிவில் டாஸ்மாக் கடை(எண்: 2318) உள்ளது.
இந்த கடையில், சங்கரன்கோவிலை சேர்ந்த செல்வராஜ் (36) மேற்பார்வையாளராகவும், அக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (28) விற்பனையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
டாஸ்மாக் கடையில் சரக்கு விற்பனை தொகை லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 14ம் தேதி இரவு 10.00 மணிக்கு விற்பனையாளர் மாரிமுத்து, கடையை பூட்டிவிட்டு, அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளார்.
அவர் மீண்டும் 11.30 மணியளவில் கடைக்கு திரும்பிய போது கடையின் ஷட்டர் பூட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது, உள்ளே சென்று பார்த்த போது, மேஜையில் இருந்த பணம், லாக்கரில் இருந்த பணம் திருட்டு போனது தெரிய வந்தது.
இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. கடையில் பணியாற்றிய மாரிமுத்து மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, பணத்தை, மாரிமுத்து, அவரது உறவினர் பொன்னுசாமி (38) மற்றும் நண்பர் சக்திவேல் (26) திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஐந்து லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications
