இளம் விடுதலை புலிகளை விடுவிக்கிறது இலங்கை!
கொழும்பு: 18 வயது நிரம்பாத இளம் விடுதலைப் புலிகளை ராணுவ சிறையிலிருந்து விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கை தேசிய சிறார் பாதுகாப்பு ஆணையத் தலைவர் ஜகத் வெல்லவட்ட கூறுகையில்,
இலங்கை அரசுக்கு எதிரான போரில் 18 வயது நிரம்பாத சிறுவர்களையும் விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர். கடந்த ஆண்டு நடந்த போரின்போது 510 இளம் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் செய்தபோது அவர்களுக்காக ஓராண்டு மறுவாழ்வு திட்டப் பயிற்சியைத் தொடங்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கொழும்பு புறநகர்ப் பகுதியான ரத்மலானாவில் மையம் ஏற்படுத்தப்பட்டு இளம் புலிகளுக்கு மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மறுவாழ்வு திட்டத்தில் பங்கேற்ற 150 இளம் புலிகள், அவர்கள் பெற்றோரிடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 273 இளம்புலிகள் அந்த மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் மே மாதத்துக்குள் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இளம் புலிகள் தவிர 12,000 போராளிகள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிப்பது குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications