முல்லைப் பெரியாறு-இந்தியா துண்டு துண்டாகிவிடும்: வைகோ
மதுரை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காலில் போட்டு மிதித்த கேரள அரசின் போக்கை மத்திய அரசு கண்டிக்கவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியா துண்டு துண்டாகிவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை வண்டியூரில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில், 'முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, கேரள மக்களிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றார்.
முதலில் அணை உடையும் என்றனர், பின்பு, அணைக்கு ஆபத்து என்றனர். உலகத்தில் இவ்வளவு வலுவான அணை வேறு எங்கும் கிடையாது.
பூகம்பமே வந்தாலும், அணைக்கு எவ்வித ஆபத்தும் வராது. அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய, சுப்ரீம் கோர்ட் ஐந்து பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
முதற்கட்டமாக, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி, பேபி அணையை வலுப்படுத்திய பின்பு, 152 அடியாக உயர்த்தலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பை கேரள அரசு காலில் போட்டு மிதித்து விட்டு, தீர்ப்பு வந்த 10 நாட்களில் புதிய அணை கட்டவும், 22 அணைகளை உடைக்க அதிகாரம் தங்களுக்கு உள்ளது என்றும், அதில் எந்த கோர்ட்டும் தலையிட முடியாது என்றும் சட்டம் இயற்றியுள்ளனர்.
இதை மத்திய அரசு கண்டித்ததா? இப்போது எங்கே இருக்கிறது ஒருமைப்பாடு? இந்த நிலை நீடித்தால், இந்தியா துண்டு துண்டாகி விடும்.
நீங்கள் அணையை போட்டு மறித்தால், நாங்கள் மனிதர்களை போட்டு மறிப்போம். எங்கள் ஊர் வழியாகத்தான் உங்கள் ரோடு வருகிறது. இந்த பிரச்னைகளை வலியுறுத்தி, மே 28 ம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications