ஆண்டு இறுதியில் இந்தியா வர ஒபாமா திட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவு விவகாரங்களில் இந்தியாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாகவும், ஒபாமா இந்தியா தவிர்க்க முடியாத அத்தியாவசியமான கூட்டாளியாக கருதுவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நடந்த உலக விவகாரங்களுக்கான சிகாகோ கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர்,
'இந்தியாவுக்கு ஒபாமா நிர்வாகம் எவ்வளவு முக்கியத்துவமும், முன்னுரிமையும் தருகிறது என்பதை இந்திய பிரதமர் மன்மோகனை வெள்ளை மாளிகை விருந்துக்கு அழைத்த சம்பவம் முழுமையாக பிரதிபலிக்கும்.
இந்திய பிரதமரின் அமெரிக்க வருகைக்கு பதில் பயணமாக ஒபாமா இந்தியா செல்லவேண்டியதை முக்கியமாக கருதுகிறார். அநேகமாக இந்தாண்டு இறுதியில் ஒபாமாவின் இந்திய பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும், அமெரிக்காவும் பல்வேறு விவகாரங்களில் ஒரேமாதிரியான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
ஆக்கப்பூர்வமான கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பில் இந்திய- அமெரிக்க உறவை விட சிறந்ததாக ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிட இயலும்.
அதற்காக இரு நாடுகளும் எல்லாவற்றிலும் ஒத்துப்போகும் என்று அர்த்தமல்ல. பல முரண்பாடுகள் உள்ளன. ஆனால், இயல்பாகவே இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உறுதியான அடிப்படை உறவு உள்ளது. அதோடு இரு நாடுகளும் தங்கள் நாட்டு நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மட்டுமல்லாது சர்வதேச பொது நலன்களுக்காக செயல்படுகின்றன.
இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சிகள் இரு நாடுகளுக்கு மட்டுமல்லாது உலக சமுதாயத்துக்கு பயனளிப்பதாக அமையும்.
ஆப்கானிஸ்தான் மறு கட்டமைப்புப் பணிகளில் இந்தியாவின் பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. ஆப்கானிஸ்தானை மறுநிர்மாணம் செய்த முக்கிய ஐந்து நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
ஆப்கானிஸ்தான் புணரமைப்பு பணிகளுக்காக இந்தியா 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications