நூல் விலை உயர்வு - கண்டித்து 23ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: நூல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் திமுக அரசைக் கண்டித்து வருகிற 23ம் தேதி பள்ளிப்பாளையத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளையம், குமாரபாளையம், வெண்ணந்தூர், அத்தனூர், ராசிபுரம், குருசாமிபாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், சீரப்பள்ளி ஆகிய பகுதிகள் விசைத்தறித் தொழிலுக்கு பிரசித்தி பெற்றவையாகும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அனைத்துப் பொருட்களின் விலைகளும் ஏறுவதைப்போல், நூலின் விலையும் விஷம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் நூலின் விலை 30 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து விட்டது. உதாரணமாக, 164 ரூபாயாக இருந்த ஒரு கிலோ 60 கோன் நூலின் விலை 224 ரூபாயாகவும், 1,125 ரூபாயாக இருந்த ஒரு கிலோ 2/80 கோன் நூலின் விலை 1,500 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது.
நூலின் விலை உயர்வு காரணமாக, உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கவில்லை. இதனால் உற்பத்தி குறைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், விசைத்தறித் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தியாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே மின்வெட்டு காரணமாக பாதிப்படைந்துள்ள நிலையில், இது போன்ற நூல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. நூல்களின் விலை உயர்வில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இது போன்று, மாதத்திற்கு இருமுறை நூலின் விலை உயர்ந்து கொண்டே போனால், இந்தத் தொழிலே நசுங்கி விடும் என்று இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
விசைத்தறி தொழிலுக்கான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து, இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
எனவே, உயர்ந்து கொண்டே வரும் நூலின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல், விசைத்தறித்தொழிலை முடங்கும் அபாயத்திற்குக் கொண்டு வந்திருக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், விசைத்தறித் தொழிலுக்கு, நியாயமான குறைந்த விலையில் நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில், 23-ந்தேதி காலை 10 மணி அளவில், பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கணடன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச்செயலாளர் முத்துசாமி தலைமையிலும், நாமக்கல் மாவட்டக்கழகச் செயலாளர் தங்கமணி எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications