முன்னாள் விடுதலைப் புலிகளுக்கென தனி கிராமங்கள் அமைக்கிறது இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்க புதிதாக சமுதாய கிராமங்கள் அமைக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இது கிட்டத்தட்ட சிறை போலவே இருக்கும் எனத் தெரிகிறது. இந்த கிராமங்களை விட்டு முன்னாள் புலிகள் அமைப்பினர் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து இலங்கை அரசு புதிதாக நியமித்துள்ள மறுவாழ்வுப் பணிகளுக்கான ஆணையர் சுதந்தா ரணசிங்கே நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் போர் காலத்தில் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தவர்கள். மற்றவர்கள் போரின் போதும், போருக்கு பின்னும் கைது செய்யப்பட்டவர்கள்.
இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பிரத்தியேகமாக இவர்களுக்கென்று தனியாக சமுதாய கிராமங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை அரசு வழங்குவதற்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் ஆரம்பிக்கும்.
இதற்காக ஏற்கனவே இடங்களையும் தேர்வு செய்தாகிவிட்டது. முதல்கட்டமாக 200 குடும்பங்களை குடியமர்த்துவோம். தற்போது முகாம்களில் 3 ஆயிரம் பேர் திருமணமானவர்கள். அவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
மேலும் இவர்களுக்கு தொழில் பயிற்சிகளும் கற்றுத் தரப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications