சிபிஎம் தலைவர் டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணம்- ஏரியில் உடல் மீட்பு

சென்னை போரூர் ஏரியில் அழுகிய நிலையில் அவரது உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 12ம் தேதி முதல் வரதராஜனைக் காணவில்லை. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். வரதராஜன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அவர் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ள கடிதங்கள் குழப்பத்தைக் கூட்டுவதாகவே இருந்தது. இதையடுத்து வரதராஜனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது.
மனைவி, வளர்ப்புமகன் உள்ளிட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். உறவினர்கள் வட்டாரத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அருகே போரூர் ஏரியில் அடையாளம் தெரியாத அளவுக்கு அழுகிப் போயிருந்த ஒரு ஆணின் உடல் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றினர். இது வரதராஜனாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர்.
உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடலை அடையாளம் காட்ட வரதராஜனின் வளர்ப்பு மகனை போலீஸார் அழைத்தனர். அவரும் வந்து பார்த்தார். ஆனால் இது தனது தந்தையின் உடலைப் போல இல்லை என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், வரதராஜனின் மனைவி சரஸ்வதி உடலைப் பார்த்தார். அப்போது இது தனது கணவர்தான் என்று கூறி அவர் கதறி அழுதார். இதன் மூலம், வரதராஜனின் உடல்தான் அது என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக டி.என்.ஏ. சோதனை செய்து பார்த்து இது வரதராஜன் உடலா அல்லது வேறு யாரேனுமா என்பதை உறுதிப்படுத்த போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது வரதராஜனின் மனைவி தனது கணவரின் உடல்தான் இது என்று அடையாளம் காட்டியுள்ளார்.
வரதராஜன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வரதராஜனின் உடலை அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ள போதிலும் இதை முறைப்படி போலீஸார் இன்னும் அறிவிக்கவில்லை. உரிய மருத்துவ சோதனைகளுக்குப் பி்ன்னரே வரதராஜன் உடல்தான் என்பதை போலீஸார் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications