அரசியல் வாழ்வில் 50 ஆண்டுகளைத் தொட்ட வைகோ - பாராட்டு விழா

திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் வைகோ. வை. கோபாலாசமி என்ற இயற்பெயர் கொண்டிருந்தாலும், அனைவரும் அன்பாக வைகோ என்று அழைக்கே, அரசு கெஜட்டிலேயே அந்தப் பெயரை மாற்றிக் கொண்டவர் வைகோ.
திமுகவில் இருந்தபோது அதன் முக்கியத் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர். இடி முழக்கம் போன்ற அவரது பேச்சு, கொண்ட கொள்கையில் விடாப்படியாக இருப்பது, தனது ஆணித்தரமான வாதங்களால் நாடாளுமன்றத்தை அலற வைத்து, எழுத்திலும் பேச்சிலும் புள்ளி விவரங்களை அடுக்குவதிலாகட்டும், சொல்ல வருவதை தெள்ளத் தெளிவாக சொல்வதிலாகட்டும், வைகோவுக்கு நிகர் வைகோதான்.
மாணவர் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர் வைகோ. பட்டி தொட்டியெங்கும் தனது பட்டாசுக் குரலால் வசீகரித்தவர். இவரைப் போல நடை பயணம் மேற்கொண்ட தலைவர்கள் தமிழகத்தில் மிக மிக அரிது.
எதிரிகளை விமர்சிப்பதிலும் நாகரீகத்தைக் கடைப்பிடிக்கும் வைகோ அரசியல், பொது வாழ்வில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு மதிமுக சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா எடுக்கப்படுகிறது.
இதுகுறித்து ம.தி.மு.க.வின் தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் கூறுகையில்,
அரசியல்-பொது வாழ்வில் 50 ஆண்டுகள் பொன்விழா காணும் பொதுச் செயலாளர் வைகோவின் மக்கள் சேவை பணியை பாராட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடத்தப்படும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டி வெற்றி மாநாடாக இதை நடத்த உள்ளோம்.
இந்த மாநாட்டில் வைகோவின் சிறப்புரை மேலும் எழுச்சியை உருவாக்கும். கட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்த மாநாடு அமையும். மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications