முல்லைப் பெரியாறு குழு: தமிழகம் இடம் பெற வேண்டும்-ஜெயலலிதா

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஐவர் குழுவை அமைத்திருக்கிறது. இதில் மத்திய அரசு சார்பில் இரண்டு தொழில் நுட்ப வல்லுநர்களும், தமிழக அரசின் சார்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும், கேரள அரசின் சார்பில் ஒரு தொழில்நுட்ப வல்லுநரும் நியமிக்கப்பட வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், ஐந்து பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருப்பது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு கருணாநிதியிடம் கேட்டபோது, “கேரள அரசிற்கு சாதகமாக எந்தவிதமான முடிவும் வந்துவிடவில்லை" என்று கூறினார். தற்போது, திமுக பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் அந்தப் பிரச்சனையையே கைகழுவி விட்டுவிட்டார். தமிழகத்தின் நலன்களை காக்க வேண்டிய ஒரு முதலமைச்சர், ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று அறிவிப்பது முறையற்ற செயல்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் தான் இது போன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இவ்வாறிருக்க, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைக்கப்படவிருக்கும் ஐவர் குழுவில் தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி இடம் பெறவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பிற்கு எதிரான கேரள அரசின் சட்டத்தை தமிழக அரசு ஆதரிப்பதாக அர்த்தம் ஆகிவிடாதா?.
தமிழகத்தின் சார்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்றால், தமிழகத்தினுடைய கருத்துகளை பிரதிபலிக்க முடியாத சூழ்நிலை வந்து விடாதா?.
தமிழகத்தின் பிரதிநிதியாக ஐவர் குழுவில் யாரும் இடம் பெறாவிட்டால், தமிழகத்தின் சார்பில் சொல்வதற்கு ஏதுமில்லை என்று உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டு விடாதா?.
தமிழகத்தின் சார்பில் ஐவர் குழுவில் யாரும் இடம்பெறாத பட்சத்தில், கேரள அரசிற்கு சாதகமான ஓர் அறிக்கையை மேற்படி குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால், அதன்படி, தமிழகத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பை வழங்க வேண்டிய நிலைமை உச்ச நீதிமன்றத்திற்கு ஏற்பட்டு விடாதா?.
தமிழகத்திற்கு பாதகமான ஒரு தீர்ப்பு வரும் பட்சத்தில், அதை எதிர்த்து மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தானே முறையிட வேண்டும்? இது காலதாமதத்திற்கு வழி வகுக்காதா?.
இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல், ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று கருணாநிதி அறிவித்து இருப்பது முறையற்ற செயல்.
ஒரு வேளை சுயநலம் காரணமாக தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க கருணாநிதி முடிவு எடுத்து விட்டாரா? இதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை. தன்னுடைய இந்தச் செயலை கருணாநிதி எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
இந்திய அரசியல் சாசனத்திற்கு நம்பிக்கையுடனும், நாணயத்துடனும் நடந்து கொள்வேன் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதலமைச்சர், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச்சின் தீர்ப்பை உதாசீனப்படுத்துவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும்.
இந்த ஐவர் குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று முடிவெடுத்து இருப்பதன் மூலம் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்து தனது கடமையிலிருந்து தவறிவிட்டார்.
கருணாநிதியின் இந்த செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் தமிழகத்தின் சார்பில் திறமையான ஒருவரை நியமித்து தமிழகத்தின் உரிமைகளை அந்தக் குழுவில் பிரதிபலிக்க செய்து, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications