இன்று ஜெ. பிறந்த நாள்-எளிமையாக கொண்டாட்டம்

வழக்கமாக காணப்படும் ஆர்ப்பாட்டம், அமர்க்களம் எதுவும் இந்த ஆண்டு இடம் பெறவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 62வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்குள்ளாகியுள்ள நிலையில், தனது பிறந்த நாளை ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் கொண்டாட வேண்டாம். ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டாடுங்கள் என்று ஏற்கனவே ஜெயலலிதா அதிமுகவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி அதிமுகவினர் அதைக் கொண்டாடினர். கோவில்களில் தங்கத் தேர் இழுத்தும், அன்னதானம், ரத்ததானம் உள்ளிட்டவற்றை வழங்கியும் அதிமுகவினர் ஜெயலலிதா பிறந்த நாளைக் கொண்டாடினர்.
இதுவரை ஜெயலலிதாவின் பிறந்த நாள் இவ்வளவு அமைதியாகக் கொண்டாடப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு மிகவும் அமைதியாக முடிந்தது ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
அதில், 62-வது பிறந்தநாள் காணும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, நிறைந்த உடல் ஆரோக்கியத்துடன், நீடித்த ஆயுளோடு இருக்கவும், சமுதாயப் பணிச் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருந்தார் பொன். ராதாகிருஷ்ணன்.
ஜெ பேனர் கிழிப்பு-சாலை மறியல்:
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி வேலூர் மாவட்டம் இலவம்பாடி ஒன்றியம் சார்பில் அணைக்கட்டு அடுத்த தார்வழி கிராமத்தில் அதிமுக வினர் டிஜிடல் பேனர் வைத்திருந்தனர்.
நேற்று முன் தினம் இரவு பேனரை யாரோ கிழித்து விட்டனர். தகவல் அறிந்த அதிமுகவினர் அங்கு விரைந்தனர்.
அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ பாண்டுரங்கன் தலைமையில் அப்துல்லாபுரம் தங்க நாற்கர சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், பெங்களூர்-வேலூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பேனரை கிழித்தவர்களை கைது செய்தவதாக போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியலை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications