ஜெ. போராட்டத்தைப் பார்த்து மக்கள் சிரித்துத் தொலைப்பார்களே - கருணாநிதி கிண்டல்
சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அரசு மருத்துவமனை இருந்தால்தான் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். மக்களுக்கும் வசதியாக இருக்கும். இது கூட தெரியாமல் போராட்டம் நடத்தும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்த்து மக்கள் சிரித்துத் தொலைப்பார்களே என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி: விழுப்புரம் நகரத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றும் அரசு முடிவினை எதிர்த்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி?
பதில்: விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க தி.மு.க. ஆட்சியில் முடிவெடுத்து இந்த ஆண்டு முதல் அங்கே மருத்துவக் கல்லூரி உருவாகி அதனை வருகின்ற மார்ச் 7-ம் தேதியன்று நான் திறந்து வைக்கவிருக்கிறேன். அந்த மாவட்ட மக்கள் மத்தியில் அங்கே அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியிலே இருக்கிறார்கள்.
அதனை அம்மையாரால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதென்றால், அதையொட்டி ஒரு பெரிய மருத்துவமனை அமைந்தால்தான் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்பது சாதாரண அறிவு படைத்த ஒரு பாமர மனிதனுக்குக் கூடத் தெரியும். ஆனால் அதற்காக ஒரு முன்னாள் முதல்-அமைச்சர் ஆர்ப்பாட்டம் நடத்த முன் வந்திருப்பதைப் பார்த்து அந்த மாவட்ட மக்களே; சிரித்துத் தொலைப்பார்களே! பாவம்; என் செய்வது?
கேள்வி: ஆனைமலையை குடையும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தாங்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு திரும்பத் திரும்பச் சொல்லியும் தா. பாண்டியன் ஆனை மலை மீட்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமென்று அறிவித்திருக்கிறாரே?
பதில்: ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளலாம் - ஏற்ற பாத்திரத்தை நடிக்காமல் நாடகத்தை முடிக்க முடியுமா?
கேள்வி: முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஐவர் குழுவில் பங்கேற்கத் தேவையில்லையென்று தி.மு.கழகம் எடுத்த முடிவினை ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கண்டித்து அறிக்கை விட்டதைப் பார்த்தீர்களா?
பதில்: நான் தான் அ.தி.மு.க. தலைவி விடுத்திருந்த அறிக்கையை ஏற்கனவே படித்து விட்டேனே? இவர்கள் அறிக்கையை வேறு படிக்க வேண்டுமா?
கேள்வி: பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரிக்கப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்திருப்பதைப் பற்றி?
பதில்: சிறுதாவூரில் ஏழையெளிய மக்களின் நிலங்களை ஜெயலலிதா ஆக்கிரமித்துவிட்டார் என்றும், சுரண்டி விட்டார் என்றும் போராட்டம் நடத்தியது நினைவுக்கு வந்தால் மறந்து விடுங்கள்!
கேள்வி: முல்லைப் பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அமைத் துள்ள ஐவர் குழுவில் தமிழக அரசு பங்கேற்க வேண்டுமென்று தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறாரே?
பதில்: அந்தக் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா "அந்தக் குழுவை தமிழக அரசு எதிர்க்கவில்லை, பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றுதான் கூறியுள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் நிலையையும் கேரள அரசின் நிலையையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்று சொல்லியிருந்தார். மேலும் இந்தப் பிரச்சினை பற்றி அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வமான ஏடான "ஜனசக்தி'', 23-2-2010 தேதிய தனது தலையங்கத்தில்,
"முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுத் தீர்ப்பளித்தது.
கேரள அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத தோடு சட்ட மன்றத்தை அவசரமாகக் கூட்டி அதனை எதிர்த்து சட்டமே நிறைவேற்றி விட்டது........ முல்லைப் பெரியாறு அணையைப் பற்றிய தாவாவை மத்திய அரசும், கேரள அரசும், உச்சநீதிமன்றமும் காலம் கடத்தி வருவதைப் பார்க்கும்போது அனுபவத்தில், தாமதமாகும் நீதி, மக்களுக்கு நீதி மறுப்பதாகும் என்று முடிவாகிவிடும் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.
முல்லைப் பெரியாறு தாவாவைப் பற்றிப் பரிசீலனை செய்வதற்கு மீண்டும் ஐந்து பேரைக் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க.வின் பொதுக்குழு உச்ச நீதி மன்றம் சார்பிலும், ஏழு பேர் கொண்ட மிட்டல் குழு சார்பிலும் ஏற்கனவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அணை வலுவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது, இந்நிலையில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதி இடம் பெறத் தேவையில்லை என்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
தி.மு.க.வின் பொதுக் குழு தீர்மானத்தில் நியாயமான காரணம் உள்ளது. ஆனால் மத்திய அரசை நிர்ப் பந்தித்து பணிய வைக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை..............''
என்று எழுதப்பட்டுள்ளது. இதையெல்லாம் தா.பாண்டியன் படித்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான உ.ரா. வரதராசன் மறைவு குறித்து - இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் அளித்த பேட்டியைப் படித்தீர்களா?
பதில்: கட்சி எடுத்த ஒழுங்கு நடவடிக்கைதான் அவரது தற்கொலைக்கு காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்போது நூறு முறை யோசித்திருக்க வேண்டும் என்றும், அந்த நடவடிக்கை அவர் தவறு செய்திருந்தால் திருத்தும் அளவிற்கு இருந்திருக்க வேண்டுமே தவிர உயிரை பறிக்கும் அளவுக்கு இருந்திருக்கக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறார்.
அவருடைய இந்தக் கருத்து அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. ஆனால் இந்தக் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் விளக்கம் அளித்திருக்கிறார். எப்படியோ ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளரை - செயல் வீரரை அந்தக் கட்சியும் இழந்து விட்டது, நாமும் இழந்து விட்டோம். இந்தப் பிரச்சினையை மேலும் பெரிதாக்கி மறைந்தவருடைய புகழுக்கு மாசு கற்பிக்காமல் இருப்பது தான் நல்லது. நாகரிகமான அரசியலுங்கூட!
கேள்வி: தமிழகத்தில் தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆள் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவர் பேசியிருக்கிறாரே?
பதில்: ஏன்; அவரே முன் வரலாமே!












Click it and Unblock the Notifications