3 நாள் பயணமாக சவூதி அரேபியா சென்றார் பிரதமர்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக இன்று சவூதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
இந்த பயணத்தின்போது தீவிரவாதிகள் உள்ளிட்ட குற்றவாளிளை ஒப்படைப்பது தொடர்பான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 11 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகவுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளில் சவூதி அரேபியா செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 1982ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சவூதி சென்றிருந்தார். அதன் பின்னர் எந்த இந்தியப் பிரதமருமே அங்கு செல்லவில்லை.
தனது பயணம் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியப் பயணம் சிறப்பான முக்கியத்துவம் கொண்டதாகும். இந்தியாவின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் இந்தப் பயணம் பெரும் உதவியாக இருக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையே, பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், விண்வெளி, மனித வளம், அறிவு சார் தொழில் துறை ஆகியவற்றில் புதிய மேம்பாடு காண இந்தப் பயணம் உதவும் என்றார்
நாளை மறுநாள் சவூதி அரேபிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார் மன்மோகன் சிங்.
தனது சவூதி பயணத்தின்போது மன்னர் அப்துல்லாவை சந்திக்கிறார் பிரதமர். அப்போது பாகிஸ்தான், தலிபான் பிரச்சினை, பாலஸ்தீன பிரச்சினை உள்ளிட்டவை குறித்து அவர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்துவார்.
பிரதமருடன் முகேஷ் அம்பானி, சசி ரூயா, ஆசிம் பிரேம்ஜி, டாடா தலைமை நிர்வாக அதிகாரி ராமதுரை உள்ளிட்ட தொழிலதிபர் குழுவும் செல்கிறது.












Click it and Unblock the Notifications