சாக்டீஸ், நபிகள், இயேசு, காந்தி வழியில் அஞ்சாது நடப்போம்- கடமை ஆற்றிடுவோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாக்ரடீஸ், நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து, மகாத்மா காந்தி ஆகியோரின் வழியில், எதிர்ப்புகளை அலட்சியமாகக் கருதி, அஞ்சாது அடியெடுத்து வைப்போம். கண் துஞ்சாது கடமையாற்றிடுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

விஷக்கோப்பை அளித்து தன் உயிரை மொண்டு விடப் போகிறார்கள் என்பதை உணர்ந்திருந்தும் கிரேக்கத்து ஞானக் கிழவன் சாக்ரடீஸ், தான் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை.

லட்சியத்திலிருந்து பின்னடையாமல் உலகிற்கு உரைத்திட வேண்டியதை உரைத்தே தீருவேன் என்று இறுதிவரை பிடிவாதமாக இருந்தான்.

தன் மனைவி எக்சேந்திபியிடம் விடைபெற்றுக் கொண்டு மரணத்தைத் தழுவும் நேரத்திலும் - தன் நண்பன் கிரிட்டோவை அருகில் அழைத்து - பக்கத்து வீட்டுக்காரனிடம் கடனாக வாங்கியிருந்த கோழியை திரும்பக் கொடுத்து விடு என்றான்.

நாணயத்தையும், நேர்மையையும் உணர்த்தி - நீதிமன்றம் அளித்த நஞ்சினை அருந்தி உயிர்விடுத்து - இந்த மன்பதையின் வரலாற்றில் மணிவிளக்காகத் திகழ்கிறான்.

நேற்றைய தினம் வாழ்த்துரைத்து வணங்கி மகிழ்ந்தோமே, வரலாற்று நாயகராம் - இஸ்லாமிய மக்களின் இல்லம் எல்லாம் - அவர்தம் உள்ளம் எல்லாம் என்றென்றும் நிறைந்து நிற்கும் பெருமான் நபிகள் நாயகம்.

அவரது கருத்துக்களை உடனடியாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று மன நிறைவுகொள்ள முடிந்ததா என்றால் இல்லை, இல்லை.

அவர் கொண்ட கருத்துகளை எத்துணை பொறுமையுடன், எதிர்நீச்சல் போட்டு மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டியிருந்தது என்பதை இந்த உலகமே அறியும்.

அவர் பொறுமை காத்ததற்கு உற்ற பலன் உடனடியாக கிடைத்தது என்பதற்கு இதோ ஒரு நிகழ்ச்சி சான்று. பெருமானார் நாள்தோறும் நடைப் பயிற்சிக்காகவும் - குளிப்பதற்காகவும் - சில தெருக்களைக் கடந்து செல்வது வழக்கம்.

அப்படிச் செல்லும்போதெல்லாம், அவர் புகழ் கண்டு பொறாமையால் மனம் புழுங்கியிருந்த ஒரு மங்கை - மாடியிலிருந்தவாறு குப்பைக் கூடையை அவர் தலையில் கொட்டுவது வழக்கம். அப்படி கொட்டப்பட்ட குப்பையைத் தட்டிவிட்டு, அவர் குளத்திலே மூழ்கி உடலைக் கழுவிக் கொள்வார்.

அந்தப் பெண்மணி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதாலும் - நபிகள் நாயகத்தின் மீது அளவற்ற வெறுப்பு கொண்டவர் என்பதாலும் - அந்தக் குப்பை கொட்டும் திருவிழா தினந்தோறும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஒரு நாள் அந்தத் தெருவில் அந்த வீட்டுக்கு அருகிலே நடந்துபோன போது நபிகள் நாயகம் எதிர்பார்த்தவாறு, அவர் தலையில் குப்பை கொட்டப்படவில்லை.

ஆச்சரியத்தில் மூழ்கிய நபிகள் அடுத்த வீட்டுக்காரர்களிடம், அந்த அம்மையாருக்கு என்ன நேர்ந்தது - ஏன் குப்பை கொட்டவில்லை - என்று வினவினாராம்.

அந்தப் பெண்மணிக்கு உடல்நலம் இல்லை - என்ற செய்தி கேள்விப்பட்டதும் முகமது நபி விரைந்து அந்த வீட்டின் மாடிக்குச் சென்று அந்தப் பெண்மணியிடம் உடல்நலம் விசாரித்தாராம். அவர் விரைவில் உடல்நலம் பெறவும் உதவினாராம்.

நாள்தோறும் நபிகளை வெறுத்து குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் மனம் திருந்தியதாம். இஸ்லாத்தின் பெருந்தன்மையை - அதைக் கடைப்பிடிக்கும் நபிகள் நாயகத்தை வியந்து போற்றிய அந்தப் பெண்மணி தன் செயலுக்கு வருந்தி, தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார் என்று ஒரு சம்பவம் உண்டு.

இப்படி எதிர்ப்புகளை - ஏளனங்களை - கிண்டல் கேலிகளை - ஏன்; குப்பை கொட்டும் கோணங்கிச் செயல்களைக் கூட; அந்தக் குணாளர் பொறுத்துக் கொண்ட காரணத்தால் தான் இன்று குவலயம் புகழ அவருடைய மார்க்கம் கொடிகட்டிப் பறக்கிறது.

'சிலுவையைத் தோளில் தூக்கு' என்று சிம்மாசனம் ஏறிகள் சீற்றம் கொண்ட நேரத்திலும் அந்தச் சிந்தனைச் செல்வர் அப்படியே அதனைத் தூக்கிச் சுமந்தார்.

'நீ தூக்கி வந்த சிலுவையிலேயே நீ அறையப் படுவாய்' என்று ஆணை பிறந்த வேளையிலும் - கையிலும், காலிலும், கழுத்திலும், நெற்றியிலும் ஆணிகள் அடிக்கப்பட்டு குருதி குளமெனப் பெருகியபோதும் - உறுதி தளராமல் ஒரே லட்சியத்தோடு உயிர்விடத் தயங்காத உத்தமர்தானே இன்று உலகெங்கும் பரவியிருக்கின்ற கிறித்துவத்தின் தலைமகனாக - அருளாக - அன்பாகப் போற்றப்படுகிறார்.

இந்தத் தண்டனை தனக்குத் தரப்படும் என்பதை அறிந்தும், தண்டனிட விரும்பாமல், கொண்ட கொள்கையில் - கோபுர உச்சியாக - உச்சியின் கலசமாக உயர்ந்து நின்றவரன்றோ ஏசுபிரான்!

மத பேதம் ஒழித்து என் மக்களை ஒன்று படுத்துவேன் - சாதி மத பேதம் இல்லா சன்மார்க்க நிலை காண்பேன் - என்று சபதம் ஒலித்து - நவகாளிகளுக்கு நடந்து சென்று - உலகம் போற்றும் தன் உயிரை ஒரு உலுத்தனின் மத வெறிக்கும் - அவன் வீசிய மூன்று குண்டுகளுக்கும் இரையாகத் தந்தாரே;

அவர் என்ன; தென்னாப்பிரிக்காவில் வக்கீல் பதவியைத் துறந்துவிட்டு இந்திய தேசத்தை ஆளுவதற்காக வந்தவரா? இல்லை: இந்த நாடு அடிமைத் தளையிலிருந்து மீளுவதற்காகப் பாடுபட்டவர். அவருக்குக் கிடைத்த பரிசு தானே அந்த மூன்று குண்டுகள்?

லட்சியங்களுக்கும், கொள்கை உறுதிக்கும் இத்தகைய பரிசுகள் தான் கிடைக்கும் என்றால் அதனைத் தாங்கிக் கொள்வோர் - அந்தப் பரிசுகளை வாங்கிக் கொள்வோர் - தம்மை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கட்டும் இந்த நல் உலகம் என்று எண்ணித்தான் எதிர்ப்புகளை அலட்சியமாகக் கருதுவர்.

நெஞ்சுருக்கும் இந்த நிகழ்ச்சிகளை நான் ஏன் நினைவூட்டுகிறேன், தெரிகிறதா? நம் பயணத்திற்கு வலிவான துணைகளாக இந்நிகழ்ச்சிகள் இருக்கும் - ஆகவே அஞ்சாது அடியெடுத்து வைப்போம் - கண் துஞ்சாது கடமையாற்றிடுவோம்! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+