இந்தியா- பாக். பேச்சில் சவூதியும் முக்கியப் பங்கு வகிக்கும்: தரூர்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
ரியாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் சவூதி அரேபியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என கூறி சலசலப்பை ஏற்படுத்தினார் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர். இருப்பினும் இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் சவூதிக்கு முக்கியப் பங்கு உண்டு என்று தான் கூறியதாக விளக்கியுள்ளார் தரூர்.

சவுதி அரேபியாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இன்று ரியாத்தில் நடந்த சவுதி தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

சவுதி மன்னர் அப்துல்லா உட்பட சவுதி அரேபியாவின் பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசியதாவது:

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இந்தாண்டில் 7 சதவீதத்தை தொடும் நிலை உள்ளது. அடுத்த இரண்டாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9 சதவீத வளர்ச்சி என்ற நிலையை இந்தியா அடைந்துவிடும்.

மிகப் பெரிய சமூக மாற்றத்துக்கான தளத்தில் தற்போது இந்தியா உள்ளது. உலக பொருளாதார மந்த நிலையைப் பொருட்படுத்தாது இந்தியா திடமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா.

மனித வளம், கல்வி தொழில்நுட்பம், உற்பத்தி திறன் உள்ளிட்ட தளங்களில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை சவுதி தொழில் துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக கட்டுமானம், உற்பத்தி, மருந்துகள், சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, சுற்றுலா போன்ற துறைகளில் இருதரப்பு வர்த்தகத்தை பெருக்க வேண்டும்.

சவுதியில் இந்திய முதலீடு 200 கோடி டாலருக்கும் மேல் அதிகரித்துள்ளது. சவுதியில் இந்திய பங்களிப்புடன் கூடிய திட்டங்கள் மட்டும் 500 உள்ளன.

இந்தியாவின் பல முன்னணி நிறுவனங்கள் சவுதியில் தங்களின் இருப்பை உறுதி செய்துள்ளன. இந்திய பொதுத் துறை நிறுவனமான ரைட்ஸ் (ரயில் இந்தியா தொழில்நுட்ப நிதி சேவைகள்), கூட சமீபத்தில் ரயில் இங்கு சேவை திட்டத்தில் ஒப்பந்தப் பணி பெற்றுள்ளது.

எங்களின் எரிசக்தி தேவைகளுக்கு உதவும் சவுதி அரேபியாவை நாங்கள் மிக நம்பகமான நட்பு நாடாக கருதுகிறோம்.

எனினும், இந்தியாவும், சவுதி அரேபியாவும் வழக்கமான விற்பனை-கொள்முதல் என்ற ரீதியிலான உறவுமுறையைத் தாண்டி எரிசக்தித் துறையில் மேலும் முன்னேற்றமான பாதையில் பயணிக்க தற்போது காலம் கனிந்துள்ளது.

சவுதியில் பல்வேறு எண்ணெய் மற்றும் எரிவாயு துறை திட்டப் பணிகளை மேற்கொள்ள பல இந்திய நிறுவனங்கள் மிகுந்த தகுதியானவையாக திகழ்கின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தூய்மையான எரிசக்தித் துறையில் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் புதிய கூட்டு முயற்சிகளை நாம் துவக்க வேண்டும்.

இந்தியா-சவுதி இடையிலான இருவழி வர்த்தக அளவு 25 பில்லியன் டாலரை தாண்டுகிறது. இந்தியாவுடன் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகள் வரிசையில் சவுதி 4ம் இடத்தை வகிக்கிறது.

மன்னர் அப்துல்லா பின் அப்துல்லாசிஸ் அல் சவுத் கடந்த 2006ம் ஆண்டு டெல்லி வந்து சென்ற பின்னர், இருநாடுகளுக்கு இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்த ஆண்டில் ஏற்றுமதி அளவு 500 மில்லியன் டாலராக இருந்தது, அதன் பின்னர் 2008ல் 23 பில்லியன் டாலராக உயர்ந்தது.

சவுதியை வெறும் வர்த்தக தொடர்பு கொண்ட நாடாக மட்டுமல்லாமல், வரலாற்று பிணைப்புகள் கொண்ட உறவாகவே இந்தியா கருதுகிறது. வளைகுடா நாடுகள் அனைத்திலும் இந்திய சமுதாயம் கணிசமான அளவுக்கு வியாபித்துள்ளன.

அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் சவுதி அரேபியாவை ராஜாங்க ரீதியான நட்பு நாடாகவும் இந்தியா கருதுகிறது.

இந்த அடிப்படையிலான தொடர்புகள் இரு நாடுகளுக்கு மட்டும் பலன் அளிப்பதாக இருக்காது. நாம் சார்ந்துள்ள பகுதிக்கும், உலகத்துக்கும் அது பயன் அளிக்கக் கூடியதாக அமையும் என்றார்.

முன்னதாக சவூதி கிளம்புவதற்கு முன்பு சவூதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும், நடுவில் நிற்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைதான் பிரதானமான வழி. அதைத் தவிர்த்து வேறு வழி எதுவும் இந்தியாவிடம் இல்லை.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும், காஷ்மீர் உள்பட, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என இந்தியா திடமாக நம்புகிறது. அந்தப் பேச்சுவார்த்தைகள் சுதந்திரமாக இடம் பெற தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டியது அவசியம். அதை பாகிஸ்தான் செய்தாக வேண்டும்.

பாகிஸ்தானுடன் அமைதியான, இணக்கமான உறவையே இந்தியா எதிர்பார்க்கிறது. அந்த அடிப்படையில்தான் எங்களுடன் பேச விரும்புவோரை நாங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.

தீவிரவாதம் இரு நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. எனவே இரு நாடுகளுக்கும் உள்ள முக்கிய கவலையே தீவிரவாதம்தான். இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்.

பாகிஸ்தான் குறித்த எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நல்ல அண்டை நாடுகளாக இரு நாடுகளும் திகழ வேண்டும் என்பதே எங்களது எண்ணம் என்றார் சிங்.

தரூர் ஏற்படுத்திய குழப்பம்

பிரதமருடன் வந்துள்ள வெளியுறவு இணையமைச்சர் சசி தரூர் இதன் பிறகு ரியாத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்த போது,

'இந்தியா - பாகிஸ்தான் இடையே சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்' எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரதமருடன் மன்மோகனுடன் அரசு முறை பயணமாக சவுதி வந்துள்ள சசி தரூரின் இந்த பேட்டி உடனடியாக, ட்விட்டர் உள்ளிட்ட வலையமைப்புகளில் காரசாரமான விவாதங்களை எழுப்பியது.

இதை அடுத்து உடனடியாக நிருபர்களை கூட்டி தனது பேச்சை மறுத்த சசி தரூர், 'நான் சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்யவேண்டும் எனக் கூறவில்லை. பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே பயனுள்ள ஒத்துழைப்பை அதாவது பாகிஸ்தானுக்கு எடுத்து சொல்லும் பங்களிப்பை வழங்கவேண்டும் என்பது தான் என் கருத்து' என்று மழுப்பலான விளக்கத்தை தந்தார்.

'பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா நீண்டகாலமாக நெருக்கமான உறவை கொண்டிருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். அதுவே, இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் பயனுள்ள பங்களிப்பை சவுதி அரேபியா அளிப்பதற்கு வாய்ப்பாகும்.

இருநாடுகளுக்கு இடையிலான விவகாரங்களை சவுதி அரேபியாவால் கவனமாக சீர் தூக்கி பார்த்து சிந்திக்கவும், பாகிஸ்தானுக்கு எடுத்துச் சொல்லவும் முடியும்' என சசி தரூர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+