பெட்ரோல் டீசல் விலை உயர்வு: வழிகாட்டுகிறார் பவார் - நம்பிக்கையில் காங்.

Subscribe to Oneindia Tamil

Pawar
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுப் பிரச்சினையில், எதிர்க்கட்சிகளைப் போல கூட்டணிக் கட்சிகளான திமுகவும், திரினமூல் காங்கிரஸும் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் இன்னொரு முக்கிய தோழமைக் கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் முற்றிலும் நேர் மாறான முடிவை எடுத்துள்ளதால் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பாஜக உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், திமுகவும், திரினமூல் காங்கிரஸும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் தலைமை கலக்கமடைந்தது.

ஆனால் முற்றிலும் எதிர்பாராத வகையில் சரத்பவார் முழுக்க முழுக்கி பிரணாப் முகர்ஜியின் முடிவை ஆதரித்துள்ளார். இது காங்கிரஸுக்கு நம்பிக்கையைக் கூட்டியுள்ளது.

பவாரின் இந்த ஆதரவுக்கு காரணம் உள்ளது. விலைவாசிப் பிரச்சினையில் சரத்பவாரை அனைத்து எதிர்க்கட்சிகளும் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலும் கூட பவார் மீது கடும் அதிருப்தி கிளம்பியது. ஆனால் பிரணாப் முகர்ஜி மட்டும் பவாருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

எல்லாப் பக்கமும் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் பாவம், பவார் என்ன செய்வார் என்று கூறி பவாருக்கு ஆதரவாக உள்ளார் பிரணாப் முகர்ஜி. இதற்கு நன்றி பாராட்டும் வகையிலேயே பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட்டுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளாராம் பவார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசில், எங்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. அரசு எடுக்கும் முடிவுகளில் எங்களுக்கும் பங்கு உள்ளது. எனவே, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எந்த முடிவையும் தேசியவாத காங்., எடுக்காது.

தற்போதுள்ள சூழ்நிலையில்,மத்தியில் நிலையான அரசு அமைவது முக்கியம்.பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அந்த கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் நிலைமையை விளக்கி, சமாதானம் செய்ய முயற்சிப்போம்.

நாட்டின் நலன் கருதி, இந்த முடிவை தேசியவாத காங்கிரஸ் எடுத்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், ஏராளமான நல்ல விஷயங்கள் உள்ளன.

குறிப்பாக, விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு தொடர்பான விஷயத்திலும் நல்ல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கிராமப்புற மேம்பாடு, ஆரம்ப கல்வி போன்றவற்றுக்கும் பயன் தரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

தற்போதுள்ள சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே அனைவரின் நோக்கம். இதற்கு, மத்தியில் நிலையான அரசு அவசியம். நாட்டின் நலன் கருதி இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் பவார்.

இக்கட்டான நிலையில் உள்ள காங்கிரஸுக்கு ஆதரவு தருவதன் மூலம் தான் இருந்து வரும் இக்கட்டான நிலையிலிருந்து தப்பும் நோக்கமும் பவாரின் ஆதரவில் மறைந்திருப்பதாக கருதப்படுகிறது. அதாவது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்ளும் உத்திதான்.

இதற்கிடையே, திமுக, திரினமூல் காங்கிரஸ் ஆகியவற்றின் எதிர்ப்பு வலுப்பெறாது, அப்படியே கரைந்து போய் விடும் என்றும் காங்கிரஸ் திடமாக நம்புகிறது.

பட்ஜெட் அறிவிப்பைக் கண்டித்து மேற்கு வங்கத்தில் தடாலடியாக போராட்டம் எல்லாம் நடத்தினார் மமதா பானர்ஜி. அதேசமயம், பாஜக வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க மாட்டோம் என்று கூறி விட்டார். கிட்டத்தட்ட இது நாமும் எதிர்ப்பைப் பதிவு செய்தோம் என்பதற்காக ஒப்புக்காக நடத்தப்பட்ட போராட்டமாக மாறி விட்டது.

அதேபோல திமுக தரப்பிலும் பட்ஜெட் அறிவிப்புக்கு எதிராக வலுவான போராட்டம் எல்லாம் நிச்சயம் நடைபெறாது என்று நம்பப்படுகிறது. திமுகவின் எதிர்ப்பும் கூட கிட்டத்தட்ட ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போலவே என்று கருதப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வரி உயர்வை ரத்து செய்க என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதிய அடுத்த நாளே, புதிய சட்டசபைக் கட்டுமானத்தையும், அதில் முதல்வர் கருணாநிதி காட்டி வரும் ஈடுபாட்டையும் புகழ்ந்து கடிதம் ஒன்றை சோனியா அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சட்டசபைத் திறப்பு விழாவுக்கு பிரதமரும், சோனியாவும் வரவுள்ளனர். எனவே இந்த நிலையில் நிச்சயம் காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் திமுக நடந்து கொள்ளும் வாய்ப்புக்கே இடமில்லை என்கிறார்கள் அரசியல் புரிந்தவர்கள்.

எனவே திமுக மற்றும் திரினமூலின் எதிர்ப்புகள் படிப்படியாக கரைந்து, காணாமல் போய் விடும் என்றும் காங்கிரஸ் தரப்பு திடமாக நம்புகிறது.

போர்க்கொடி தூக்கிய கூட்டணிக் கட்சிகள் படு வேகத்தில் கீழே இறக்கி விடும் என்ற நம்பிக்கையில்தான், வரி உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+