உலகக் கோப்பை ஹாக்கி - பாக்.கை அபாரமாக வீழ்த்தியது இந்தியா
டெல்லி நேற்று தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 3வது ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது.
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நேற்று டெல்லி தியான் சந்த் ஹாக்கி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
முதலில் இங்கிலாந்து- ஆஸ்திரேலியா, ஸ்பெயின் - தென் ஆப்பிரிக்கா ஆட்டங்கள் நடந்தன. இதில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.
அதேபோல தென் ஆப்பிரிக்காவை 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இதையடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி தொடங்கியது.
இந்தியர்களின் உற்சாகக் குரல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டனர் ராஜ்பால் சிங் தலைமையிலான இந்திய அணியினர்.
முதல் பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீரர்களும் கோல் போடும் முயற்சிகளில் கடுமையாக மோதினர். இரு அணிகளும் சமமான பலத்துடன் இருந்தாலும் பாகிஸ்தானின் முயற்சிகளை இந்திய வீரர்கள் மிகவும் திறமையுடன் முறியடித்து அவர்களை விரக்தியில் தள்ளினர்.
இந்த நிலையில் இந்தியாவின் ஷிவேந்திர சிங் இந்தியாவுக்கான முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். சந்தீப் சிங் கொடுத்த பந்தை அழகாக கோலாக்கினார் ஷிவேந்திர சிங்.
அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தானுக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் சொஹைல் அப்பாஸ் பந்தை வேகமாக அடிக்க அது கோல் போஸ்ட்டுக்குள் போகாமல் பாரில் தட்டி வெளியேறியது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட சந்தீப் சிங் அதை கோலாக்கி இந்தியாவின் நிலையை ஸ்திரப்படுத்தினார்.
முதல் பாதியில் இந்தியா 2 கோல்களும், பாகிஸ்தான் கோல் ஏதும் அடிக்காமலும் இருந்தன.
2வது பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தியாவின் 3வது கோலை அடித்தார் பிரப்ஜோத் சிங். இதன் மூலம் இந்தியா வெற்றி பெறுவது உறுதியானது.
அடுத்த சில நிமிடங்களில் சந்தீப் சிங் இன்னொரு கோலைப் போட்டு இந்திய அணியை வலுவாக்கி விட்டார். தோல்வி உறுதி என்பது தெரிந்து விட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடைசி நேரத்தில் ஒரு கோலடித்தார் சொஹைல் அப்பாஸ்.
இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாகவே ஆடினர். ஆனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. குறிப்பாக சொஹைல் அப்பாஸ்தான் அவர்களின் முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தார். ஆனால் அவரை இந்திய வீரர்கள் மிகத் திறமையாக முடக்கியதால் அவரால் கோலடிக்கா முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
பாகிஸ்தான் அணிக்கு ஆறு பெனால்டி கார்னர்கள் கிடைத்தன. இருப்பினும் அதில் ஒன்றை மட்டுமே அப்பாஸால் கோலாக்கா முடிந்தது. மேலும் 2 முறை கோலடிக்கும் வாய்ப்பு வெகு அருகே வந்து பாரில் பந்து மோதி வீணாகிப் போனது.
இந்திய அணியில் கிட்டத்தட்ட அத்தனை பேருமே அட்டகாசமாக ஆடினர். குறிப்பாக, டிபென்டர்களும், மிட்பீல்டர்களும் பிரமாதப்படுத்தி விட்டனர். முதல் பாதி ஆட்டம் முழுவதும் பந்து இந்தியர்களின் பக்கமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சந்தீப்சிங்கின் ஆட்டம் வெகு நேர்த்தியாகவும், பிரமிக்கத்தக்க வகையிலும் இருந்தது. தன்னைப் பார்த்து ஏன் கோல் கீப்பர்கள் அரளுகிறார்கள் என்பதை நேற்று நிரூபித்தார் சந்தீப் சிங்.
அவர் போட்ட இரண்டு கோல்களையும் தடுக்க பாகிஸ்தான் கோல் கீப்பர் சல்மான் அக்பர் எடுத்த முயற்சிகள் சற்றும் பலன் தரவில்லை.
இன்றைய ஆட்டம்...
நியூசிலாந்து - கனடா - மாலை 4.35 மணி.
ஜெர்மனி- கொரியா - மாலை 6.35 மணி.
நெதர்லாந்து- அர்ஜென்டினா - இரவு 8.35 மணி.












Click it and Unblock the Notifications