மார்க்சிஸ்ட் கட்சியின் வன்முறை கலாச்சாரம்-ராமதாஸ் தாக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி்ல் நடந்த உட்கட்சி மோதலே டபிள்யூ.ஆர். வரதராஜன் மரணத்துக்குக் காரணம் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் தொலைக்காட்சி நேற்று இரவு செய்தி வெளியிட்டது
இந் நிலையில் இன்று மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தி சூறையாடினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளனர். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெற்ற இத்தாக்குதலில், தொலைக்காட்சியின் அலுவலகம் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த ஒளிப்பதிவு கருவிகள் சேதமடைந்துள்ளன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நொறுக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சியின் பெண் ஊழியர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட பல ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர்.
பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவை குறித்து மற்றவர்களை விட அதிகம் பேசி வருபவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர். அதற்கு மாறாக இன்று அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கியிருப்பதன் மூலம் உண்மையில் அவர்கள் யார் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் நடத்தி வருகிற வன்முறை கலாச்சாரத்தை இன்று தமிழகத்திலும் அரங்கேற்றியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறு என்று கருதினால் அதற்கு ஜனநாயகரீதியில் மறுப்பு அறிக்கை வெளியிடலாம். ஆனால், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிகை சுதந்திரத்திலும், கருத்து சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சியினரும் அனைத்து அமைப்பினரும் இந்த தாக்குதலை கண்டிக்க முன்வர வேண்டும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தொலைக்காட்சியின் அலுவலகத்துக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications