சட்டசபை திறப்புவிழா-சென்னையில் 'கெடுபிடி' ஆரம்பம்!
சென்னை: தமிழக சட்டசபை புதிய கட்டிட திறப்பு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விழா நடக்கும் பகுதி நாளை முதலே போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. விழாவை ஒட்டி சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சுமார் 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில், ரூ.450 கோடி செலவில் புதிதாக தமிழக சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தின் திறப்பு விழா வரும் சனிக்கிழமை மாலை நடக்க உள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி மற்றும் பல்வேறு மாநில தலைவர்கள் என விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர்.
சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவுக்காக ராஜாஜி மண்டபத்தின் பின்புறம் 40 அடி அகலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்படுகிறது.
பிரதமரும், சோனியாகாந்தியும் பேசுவதற்காக குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. சுமார் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் 100 அடி நீளத்திற்கு பந்தல் போடப்படுகிறது.
முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் விழா என்பதால் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. நாளை காலையில் இருந்தே சட்டசபை வளாகம் முழுக்க முழுக்க போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக டெல்லியில் இருந்து மத்திய விசேஷ பாதுகாப்பு படையின் ஐ.ஜி. ராஜேஷ் சந்திரா தலைமையில் சுமார் 50 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.
விழா நடக்கும் பகுதியில் உள்ள விடுதிகள், கடைகள் அனைத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும். மோப்ப நாய்கள் மூலம் அடிக்கடி சோதனைகள் நடைபெறும். இதற்கான பணியில் சுமார் 1,500 போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் விழா நடக்கும் 13ம் தேதி பிற்பகலுக்கு மேல் அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
13ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் இரவு 7.30 மணி வரை அரசினர் தோட்டப் பகுதியில் சாலை போக்குவரத்தும் மாற்றிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசினர் தோட்டத்துக்கு அருகே பறக்கும் ரயில் பாதை உள்ளது. விழா நடக்கும் சமயத்தில் சுமார் அரை மணி நேரத்துக்கு இந்த தடத்தில் ரயில்கள் இயக்குவதும் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
திறப்பு விழாவை பொதுமக்கள் பார்ப்பதற்காக மே தின பூங்கா, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை சந்திப்பு, மன்றோ சிலை ஆகிய பகுதிகளில் பிரமாண்ட டிவி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய பந்தோபஸ்து ஏற்பாடுகளுக்கு இடையே, பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாகாந்தியும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் வந்து சேருவார்கள்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டசபை வளாகத்தை வந்தடைகிறார்கள்.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை விழா நடக்கிறது. நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் மீனம்பாக்கம் விமான நிலையச்சில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்கள்.
திராவிடப் பழமையும், பொறியியல் புதுமையும்...:
புதிய சட்டசபை கட்டிடப் பணிகள் சிறப்பாக நடப்பதற்கு பாடுபட்ட தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், 'உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்தும் மக்கள் பிரதிநிதித்துவ மாண்புகளைப் பேணிக் காத்த தமிழகத்தில் திராவிடப் பழமையும், பொறியியல் புதுமையும் பின்னிப் பிணைந்த பிரம்மாண்டச் சின்னமாய் புதிய தலைமைச் செயலக வளாகம் எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழ் கலாசாரத்துடன் ஒன்றிணைந்து திராவிடக் கட்டடக் கலையின் வெளிப்பாடாக எல்லா வகைகளிலும் உலகத்தரம் வாய்ந்ததாக புதிய கட்டடங்கள் உருவாகின்றன.
கட்டடத்தின் வெளிப்பகுதியில் வேதியியல் வண்ணப்பூச்சைத் தவிர்த்து, கண்ணாடியும் மெருகேற்றப்பட்ட கருங்கல் பலகையும் பொருத்தப்படுகின்றன.
நான்கு வட்டங்கள் கொண்ட இந்தக் கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் மேல் தளத்தில் பசுமையானத் தோட்டமும், வெளிப்புறம் வாகனங்கள் செல்ல கூரை அமைக்கப்பட்ட சாலையும், கூரையின் மேல் புல்வெளி மற்றும் செடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தில் குறைந்த அளவு மின்சாரத்தில் எரியும் விளக்குகள் மற்றும் மின்சாரக் கருவிகள் உபயோகிக்கப்படுகின்றன.
இந்தியாவில் எங்கும் இல்லாத புதிய வடிவமைப்பாக இந்தக் கட்டடம் இருப்பதாலும், அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்படுவதாலும் மற்ற கட்டிடங்களுக்கு இது முன்ணுதாரணமாக விளங்கும்.
கட்டிடம் சிறப்பாக நிறைவுப் பெறுவதற்குப் பாடுபட்ட தலைமைச் செயலாளர், நிதித் துறை, பொதுப்பணித் துறை செயலாளர்கள், பொறியாளர்கள், தனியார் கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications