செக்ஸ் அர்ச்சகர் வழக்கு - விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக போலீஸ் உறுதி
காஞ்சிபுரம்: செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கில் விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று காஞ்சிபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக புகார் கூறப்பட்டது.
இது தொடர்பாக பெரிய காஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சகர் தேவநாதனை தேடினர்.
இதனை தொடர்ந்து தேவநாதன் காஞ்சிபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனுக்கு காஞ்சிபுரம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுதா, நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
தற்போது அவர் 15 நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திடும்படி நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 90 நாட்களுக்கு மேல் ஆகியும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே தேவநாதன் மீதான வழக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
மேலும் வழக்கை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டாக இருந்த விஜயராகவன் மாறுதலாகி சென்றார். புதிய துணை சூப்பிரண்டு இன்னமும் பதவியேற்கவில்லை.
ஆனால் இந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்தார்கள். இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப் பரிசோதனை முடிவுகள் வராததால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் வழக்கை காஞ்சிபுரம் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் விசாரிக்கும்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு குறித்து துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், 'அர்ச்சகர் தேவநாதன் மீதான வழக்கை விரைவுபடுத்தி விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கின் முழுவிவரமும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறும்' என்றார்.












Click it and Unblock the Notifications