Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாடிய பண பலம் - ராகுல் வார்த்தையை நம்பி வந்த இளைஞர் காங். தொண்டர்கள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

Rahul Gandhi
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பெருமளவில் பணம் விளையாடி வருவதால் ராகுல் காந்தியின் பேச்சை நம்பி அரசியல் களத்தில் குதித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் பெரும் அதிர்ச்சியி்ல மூழ்கியுள்ளனராம்.

இந்தியாவை ஊழல் இல்லாத நாடாக, வலிமை மிக்க நாடாக மாற்ற வேண்டும். இதுவே என் வாழ்நாள் லட்சியம். இந்த வார்த்தையைத்தான் தற்போது ராகுல் காந்தி பயன்படுத்தி வருகிறார். ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சியை வளர்க்க, குறிப்பாக இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த ராகுல் காந்தி படாதபாடு பட்டு வருகிறார்.

குறிப்பாக தேறவே தேறாது என்று காங்கிரஸ்காரர்களாலேயே கூறப்படும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை வளர்த்து விட வேண்டும் என்ற தீராத வெறியில் உள்ளார் ராகுல். ஆனால் இங்கு நடப்பது என்னவோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.

ராகுல்காந்தி அழைக்கிறார் என்றதும், அரசியல் வாசனையை இல்லாத பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் போட்டி, போட்டு காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தூய சிந்தனையுடன் கட்சிக்குள் காலடி எடுத்து வைத்துள்ள இவர்கள் மூலம் மிகச் சிறப்பான, துடிப்பான, நேர்மையான நிர்வாகத்தை கொடுத்து விட முடியும் என்று ராகுல்காந்தி உறுதியாக நம்புகிறார்.

இதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் அவரது நேரடி மேற்பார்வையில் நாடெங்கும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் கடந்த சில வாரங்களாக இந்த தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களாக கே.ஜே.ராவ், உஷாநாயுடு, சூரஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தவிர ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கும் இடம், உணவு உள்பட எல்லா செலவுகளையுமே காங்கிரஸ் மேலிடம் ஏற்றுள்ளது.

இவர்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்பதற்காக இவர்களை காங்கிரஸ் மேலிடமே கவனித்துக் கொள்கிறது. இவர்கள் மூலம் தேர்வாகும் நல்ல சிந்தனை உடைய இளைஞர்கள் நிச்சயம் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்பது தான் ராகுலின் எண்ணம்.

ஆனால் பழைய குருடி, கதவை வேகமாகத் திறடி என்பதை போல நடக்கிறது அனைத்தும்.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு முதல் கட்டமாக வார்டு தேர்தல் நடத்தப்பட்டது. முதலில் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட சரி சரி நடக்கட்டும் என்று ஏளனச் சிரிப்போடுதான் அதைப் பார்த்தனர்.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 20 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் 10 பேர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள். 10 பேர் சிறப்பு பிரதிநிதிகள்.

இந்த தேர்தல் விரைவில் முடிய உள்ளது. அதன் பிறகு தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். அதோடு ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதிக்கும் தலைவர் தேர்தல் நடைபெறும்.

இவர்களை தேர்வு செய்ய வாக்களிக்கப் போவது யார் தெரியுமா? சட்டசபை தொகுதி வாரியாக தற்போது தேர்வாகி கொண்டிருப்பவர்கள் தான் ஓட்டுப் போட்டு மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.

இந்த இடத்தில் விளையாட ஆரம்பித்துள்ளனர் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள பல்வேறு கோஷ்டிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள். இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்யும் சக்தி படைத்தவர்களாக 4680 பேர் உள்ளனர்.

மாநில நிர்வாகிகளாக தங்கள் ஆள்வ ரவேண்டுமானால், சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும் தேர்தலில் தங்கள் ஆட்கள் வென்றால் தான் காரியம் நடக்கும் என்ற முடிவுக்கு வந்த அவர்கள் பணத்தை கட்டுக் கட்டுக்களாக இறக்கி பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுக்க துடிப்போடு இறங்கி விட்டனர்.

ஒவ்வொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் இளைஞர்களை முற்றுகையிட்டு ஆதரவு திரட்டுகிறார்கள். முதலில் இந்த ஆதரவு திரட்டுவது சுமூகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஓட்டுப் போட உள்ள புது வரவு இளைஞர்களை விரட்டி, விரட்டி மரியாதை கொடுத்து கவனிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஓட்டுக்காக பணத்தை அள்ளி, அள்ளி கொடுத்தனர். அதை பார்த்த மற்றொரு கோஷ்டியும் பணத்தை வாரி இறைத்தது.

ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்களாம். இதுதவிர வேறு சில ஆசைகளும் காட்டப்பட்டு வளைப்புகள் நடக்கின்றனவாம்.

வெளிமாநில மேற்பார் வையாளர்களை மீறி இளைஞர் காங்கிரசில் இந்த ஆள் பிடிக்கும் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து ஏப்ரல் 7-ந் தேதி இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் நடக்கும் என்று தெரிகிறது. அப்போது ஒரு ஓட்டுக்கு ரூ 1 லட்சம் வரை கொடுக்கவும் இந்த பாழ்ய்ப்பான கோஷ்டிகள் தயாராக உள்ளனராம்.

சட்டசபைத் தேர்தல்களில் பண பலம் விளையாடுகிறது. ஓட்டுக்கு இத்தனை தருகிறார்கள், அது தருகிறார்கள், இது தருகிறார்கள் என்று பல அரசியல் கட்சியினரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக திருமங்கலம் தேர்தலின்போதும், நாளை நடைபெறவுள்ள பென்னாகரம் தேர்தலின்போதும் பெருமளவில் பணம் விளையாடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ஆனால் அதைத் தூக்கிச் சாப்பிடும் வகையில், தற்போது இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் பண பலம் படு வேகமாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து ராகுல் காந்தியின் பேச்சை நம்பியவர்கள், நம்புகிறவர்கள் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இப்போதே பணத்தால் அடிக்கப்பட்டால் இவர்கள் எப்படி ராகுல் காந்தியின் கனவை நனவாக்குவார்கள். இவர்களை நம்பி நாம் எப்படி காங்கிரஸை வளர்க்க முடியும் என்று அவர்கள் வேதனையுடன் உள்ளனர்.

இதெல்லாம் ராகுல் காதுகளுக்குப் போகுமா என்பது தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+