எனக்கு துணை நிற்கிற அமைச்சராகவே ஸடாலினை பார்க்கிறேன்: கருணாநிதி புது விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: நீங்கள் ஸ்டாலினை துணை முதல்வராக பாராட்டுகிறீர்கள். ஆனால் நான், அவரை எனக்குத் துணை நிற்கிற அமைச்சராகத்தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை பெரம்பூரில் மாநகராட்சி சார்பில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தைத் திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

வடசென்னையில் இன்று இந்த பாலம் அமைந்திருக்கிறது என்றால், இது இந்த மாநகரின் இருபகுதிகளை இணைக்கின்ற பாலமாக மாத்திரமில்லாமல்-இரு பகுதிகளாக பிரிந்திருக்கின்ற எல்லா இயக்கங்களையும் சேர்ந்த, தமிழர்களையெல்லாம் இணைக்கின்ற பாலமாகவும் அமைய வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கிருஸ்தவர்களுக்கு ஜெருசலேம் போல், இஸ்லாமுக்கு மெக்கா போல், இந்துவிற்கு ராமேஸ்வரம் போல், திமுகவுக்கு வடசென்னை விளங்குகிறது.

இந்தப் பாலத்தை உருவாக்க மத்திய அரசு மொத்த செலவில் 35 சதவீதத்தையும்- மாநில அரசு 15 சதவீகிதத்தையும் வழங்கி- எஞ்சிய 50 சதவீதத்தை மாநகராட்சியும் வழங்கியிருக்கின்றன. இந்த அருமையான பாலம்- கண் கவரும் பாலம்-இது எத்தகைய உற்சாகத்தையும், உத்வேகத்தையும், எழுச்சியையும், மகிழ்ச்சியையும் நமக்கெல்லாம் அளிக்கிறது என்பதை எனக்கு முன்னால் பேசிய அனைவரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கு இங்கே எழுந்து நின்று பேச இயலவில்லை. உங்களுக்கு தெரியும்- கடந்த ஆண்டு நான் செய்து கொண்ட மிகப்பிரச்சினைக்குரிய முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் காரணமாக கால்களில் பலம் குன்றி -கால்கள் நிற்க முடியாத காரணத்தால்- தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவைகளுக்கெல்லாம் கூட எழுந்து நின்று மரியாதை செலுத்த முடியாது. ஆனால் மனதளவில் உங்களிடமெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிற நிலையில் இங்கே வரவேண்டியிருக்கிறது.

பாலம் ஒருவகையில் நமக்கு பலத்தை தருகிறது. எப்படியென்றால் எனக்கு கால் சரியில்லை- ஆகவே இங்கே நின்று உங்களிடத்திலே பேச இயலவில்லை. "பாலம்'' என்பதில் "கால்'' சரியாக இல்லாவிட்டால் "பலம்'' -எழுதிப்பாருங்கள் "பாலம்'' என்று- அதிலே காலை அழித்து விடுங்கள்- "பலம்'' ஆகிவிடும். இந்த பாலத்துக்கு கால் சரியாக இருக்கக் கூடாது என்று தான் கடந்த காலத்திலே ஆட்சியாளர்கள் அதை ஒடிக்க, ஊனப்படுத்த, எத்தனையோ முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டாலுங்கூட -உங்களுடைய மனப்பலத்தால்- இந்த வட்டாரத்திலே இருக்கின்ற தமிழ் மக்களுடைய ஏழை எளிய மக்களுடைய, பாட்டாளி மக்களுடைய, தொழிலாள தோழர்களுடைய அத்தனை பேர்களுடைய மனப்பலத்தால்-உங்களின் கோரிக்கை இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.

இதைக் காணுகின்ற வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டியிருக்க என்ன காரணம் என்பதை நம்முடைய மேயரின் உழைப்பு, துணை முதல்வருடைய ஆர்வமிக்க முயற்சி என்றெல்லாம் சொன்னார்கள். அவரை "துணை முதல்வர்'' என்று சொல்வது கூட, நீங்கள் எல்லாம் அவரை பாராட்டுவதைப் பார்த்தால், போற்றுவதைப் பார்த்தால் -பத்திரிகைகளிலே அவரைப்பற்றி எழுதுவதைப் பார்த்தால் அவர் உழைப்பதைப் பார்த்தால் "துணை முதல்வர்'' என்பதற்கு ஆங்கிலத்தில் "டெபுடி -சீப் மினிஸ்டர்'' என்று கூறுவீர்கள். ஆனால் நான் கருதுகிறேன், எனக்கு "துணையாக இருக்கின்ற அமைச்சர்'' என்று தான் நான் கருதுகின்றேன்.

அந்த அளவுக்கு எனக்குத் துணையாக இன்று அவர் செயல்படுகிறார். நான் என்ன கருதுகிறேன் என்பதை, என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு அந்த நினைப்பை நிகழ்ச்சியாக ஆக்குவதற்கும் நான் கருதுவதை காட்சியாக காட்டுவதற்கும் நான் எண்ணுவதை அப்படியே திண்ணியமாகச் செய்து முடிப்பதற்கும் அவர் தன்னுடைய திறமையைக் காட்டி வருவதைத்தான் இங்கே நீங்கள் கண்டீர்கள் அதைத்தான் நீங்கள் போற்றுகிறீர்கள்.

நம்முடைய மேயர் சுப்பிரமணியம்-நான் அவர் மேயராக வருவதற்கு முன்பு அவர் இந்த அளவுக்கு உழைப்பார், இந்த அளவுக்கு பணிபுரிவார், இந்த அளவிற்கு திறமையை காட்டுவார் என்றெல்லாம் எண்ணிடவில்லை. ஆனால் நான் கருதிய அந்தக் கருத்து தவறு என்பதை இன்றைக்கு அவர் செயல் மூலமாக அவர் என்னைத் தோற்கடித்துக் காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவரை எங்கேயாவது திடீரென்று கடைத் தெருவிலே பார்த்தால், இவர் மேயர் என்றோ இவரா மேயர் என்று கேட்கின்ற அளவிற்குத்தான் உருவம் படைத்தவர். மேயருக்கான தோரணையோ, மேயருக்கான டாம்பீகமோ, மேயருக்கான ஆடம்பரமோ, மேயருக்கான நடையுடை பாவனைகளோ எதுவுமில்லாமல் ஒரு சாதாரண தொழிலாளியைப்போல அவர் இருக்கின்ற காரணத்தினாலே தான், தொழிலாளர் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணங்களை- கருத்துக்களை செயல்படுத்த முடிகிறது என்றுதான் கருதுகிறேன்.

வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்வது -அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களுடைய தேவைகளை உணர்ந்து, அறிந்து புறக்கணிக்காமல் அவைகளை நிறைவேற்ற வேண்டும்.

எல்லோருக்கும் பொதுவானது தான் இந்தப் பாலம். அதைப்போல நாட்டுப் பிரச்சனைகள் எல்லோருக்கும் பொதுவானது என்று கருதிக்கொள்ள வேண்டும். அப்படி கருதினால் தான் நமக்குள் இருக்கின்ற ஆயிரம் வித்தியாசங்கள், வேறுபாடுகள் அனைத்துக்கும் அப்பால் ஒரு சக்தியாக- மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென்ற சக்தியாக -நாம் விளங்க முடியும், எல்லோரும் சேர்ந்து ஒரு பகுதியிலே தீப்பிடித்து எரியும்போது, அனைவரும் சென்று கட்சி பாராட்டாமல், நீ காங்கிரஸ்-இங்கே வராதே, நீ கம்யூனிஸ்டு-இங்கே வராதே, நீ தி.மு.க, நீ தி.க., நீ அ.தி.மு.க. உங்களுக்கெல்லாம் அங்கே இடம் கிடையாது என்று எண்ணினால் -திட்டம் வகுத்தால்-வராதே என்று மிரட்டினால்-அது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அறிகுறியாக அமையாது என்று தான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்திற்கு சென்றால், அங்கெல்லாம் இந்த அளவிற்கு ஆக்ரோஷமான கருத்து வேறுபாடு கிடையாது. பொதுப் பிரச்சனைகளிலே எல்லோரும் ஒன்றாகக்கூடி மகிழ்கின்ற நிலை பக்கத்து மாநிலங்களிலே, கேரளா ஆகட்டும், அல்லது ஆந்திரா ஆகட்டும், ஏன் மேற்கு வங்கம் ஆகட்டும், திரிபுரா ஆகட்டும், டெல்லிப் பட்டணம் ஆகட்டும் எங்கு சென்றாலும் அந்த பண்பாட்டை காண முடிகிறது. தமிழ்நாட்டிலே தான் என்ன பாலம் பெரம்பூரிலே கட்டினாலுங்கூட நம்மிடையே பாலத்தை கட்ட முடியாமல் நாம் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.அது பண்புப் பாலம், இது அன்புப் பாலம், இது நட்புப் பாலம், இது பொதுமக்களுக்காக இருக்க வேண்டிய பாலம், அப்படிப்பட்ட பாலத்தை அமைத்தால் தான் இந்தப் பாலங்களால் உருவாகின்ற பயன்களை நாம் அடைய முடியும்.

இங்கே இந்த பாலம் கட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தவர் - இந்தத் தொகுதியும் இணைந்து நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்று-மத்தியிலே அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்து-டோகா மாநாடு வரையிலே சென்று நம்முடைய இந்திய நாட்டின் குரலை ஓங்கியொலித்த தம்பி முரசொலி மாறன் அவர்களைப்பற்றி இங்கே பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள். அந்த முரசொலி மாறனுடைய பெயரை இந்தப்பாலம் பெறட்டும் என்று கேட்டுக் கொண்டு எல்லோரும் இதை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு; இந்தப்பாலத்தின் வெற்றிக்கும் இதை அமைப்பதற்கும் பாடுபட்ட அனைவருடைய ஆர்வத்தையும் பாராட்டி, வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், மேயர் மா.சுப்ரமணியம், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடும் போக்குவரத்து நெரிசல், மழைக்காலத்தில் ஏற்படும் அவதிகள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பெரம்பூரில் பாலம் கட்ட கடந்த 1999ம் ஆண்டு திமுக ஆட்சி முடிவு செய்தது. அப்போது மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தார்.

அந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி, சென்னையில் பெரம்பூர் மேம்பாலம் உள்பட 10 மேம்பாலங்களை கட்டுவதற்காக பெரம்பூரில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

மற்ற பாலங்கள் எல்லாம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்த நிலையில் பெரம்பூர் பாலம் மட்டும் இத்தனை காலமாக இழுபறியாக இருந்து வந்தது. தற்போது, தடைகளைத் தாண்டி 11 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.51 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

1,120 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலம், சென்னை நகரில் கட்டப்பட்டுள்ள பாலங்களிலேயே மிகவும் உயரமான பாலம் ஆகும். தரையில் இருந்து 13 மீட்டர் உயரத்திலும், ரயில் பாதையில் இருந்து 6.5 மீட்டர் உயரத்திலும் இது கட்டப்பட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+