பென்னாகரம் தேர்தல் முடிவு-லட்டு வழங்கிய கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து கடந்த 26-3-2010 அன்று நான் விடுத்த அறிக்கையின் இறுதியில் தேர்தல் களப் பணியாற்றும் கழகக் கண்மணிகளும்- தோழமைக் கட்சிகளின் நண்பர்களும், செயல் வீரர்களும்- என்னதான் வன்முறைகளை மாற்றார் கட்டவிழ்த்து விட்டாலும், அவைகளைப் பொருட்படுத்தாமல்,
பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும் வெற்றி ஒன்றில் மட்டுமே நாம் நாட்டம் கொண்டு, அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக் கூடிய தீயச் சக்திகளுக்கு- தீவிரவாத சக்திகளுக்கும் சற்றேனும் இடம் தராமல் கருமே கண்ணாயினர் என்ற முது மொழிக்கேற்ப பணியாற்றி, ஜனநாயகத்தை அலுங்காமல் குலுங்காமல் காத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப- என் வேண்டுகோளை மதித்து- நம்மை நோக்கி வீசப்பட்ட வார்த்தைகளைப் புறந்தள்ளி மாபெரும் வெற்றியினைக் குவித்துள்ள கழகக் கண் மணிகள்- தோழமைக் கட்சி களாம் இந்தியத் தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், விடுதலை சிறுத்தைகள், தமிழ் மாநில தேசிய லீக், எம்.ஜி.ஆர். கழகம், புரட்சி பாரதம், இந்திய தேசிய லீக், உழவர் உழைப்பாளர் கட்சி, அருந்ததியர் மக்கள் கட்சி, தமிழர் நீதிக் கட்சி, கட்டுமானத் தொழிலாளர் கழகம்,
மற்றும் பல அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள் -கிராமங்களிலே சுற்றிச் சுழன்றுப் பணியாற்றிய அமைச்சர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள், முன்னணியினர், திமுக அரசின் சாதனைகளைப் போற்றி வாக்களித்த வாக்களப் பெரு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியினைக் குவிக்கின்றேன்.
இந்த இடைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றி, கழக அரசின் பயணத்திற்கு மேலும் ஒரு தூண்டுகோலாக அமையுமென்ற நம்பிக்கையைத் தெரிவித்து, அறிக்கையிலேயே இறுதியாகத் தெரிவித்ததைப் போல- போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்- தொடர்ந்து ஆற்றுவோம் நம் பணியை என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து வெற்றிக்குப் பாடுபட்ட அத்தனை பேருக்கும் க்களித்த பெருமக்களுக்கும் மேலும் ஒருமுறை நன்றியினைத் தெரிவிக்கின்றேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
லட்டு வழங்கிய கருணாநிதி:
இதற்கிடையே, பென்னாகரம் தேர்தல் முடிவை திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர். முதல்வர் கருணாநிதியும் அப்போது அங்கு வந்தார். பின்னர் திமுகவினருக்கு தனது கையால் லட்டுகளை வழங்கி மகிழ்ந்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் உடன் இருந்தனர்.
பொன்னாரம்-தங்கபாலு மகிழ்ச்சி:
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கருத்து தெரிவி்க்கையில், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு பென்னாகரம் இடைத் தேர்தல் வெற்றி பொன்னாரமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications