டோடியுடனான காதலை கைவிடாததால் டயானா கொல்லப்பட்டார் - வக்கீல் புதுத் தகவல்

1997ம் ஆண்டு பாரீஸின் அல்மா டன்னல் பகுதியில் படு வேகமாக சென்ற காரில் பயணித்த டயானா விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். அந்த விபத்தில் டோடி அல் பயத்தும் உயிரிழந்தார்.
இது கொலை என்றும், இல்லை இல்லை விபத்துதான்றும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. புகைப்படக்காரர்கள் துரத்தி வந்ததால், கார் வேகமாக சென்று விபத்துக்குள்ளானதாகவும் பின்னர் கூறப்பட்டது.
இந்த நிலையில் அது விபத்தல்ல, கொலை என்று இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வக்கீல் மைக்கேல் மேன்ஸ்பீல்ட் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது நிச்சயம் திட்டமிட்ட படுகொலைதான். டோடி அல் பயத்துடன் டயானா கொண்டிருந்த காதலைக் கைவிட பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை பலன் தரவில்லை. இதனால்தான் அவர்களை தீர்த்துக் கட்ட திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
ஆனால் கொலைகாரர்கள், டயானாவையும் பயத்தையும் கொல்ல திட்டமிடவில்லை. விபத்தின் மூலம் இருவரையும் பிரித்து விடும் திட்டமே இருந்தது. ஆனால் அது கடைசியில் இருவரின் உயிரையும் பறித்து விட்டது.
கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருவரையும் நிரந்தரமாக பிரிக்கும் திட்டமே அது. ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.
அந்த சதித் திட்டத்தை தீட்டியவர்கள் வெளிச்சத்துக்கு வராமலேயே போய் விட்டனர் என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் டயானா வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. டயானா சட்டவிரோதமான முறையில் உயிரிழந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டது. டயானா பயணித்த காரை ஓட்டிய டிரைவர் ஹென்றி பாலின் படு வேகமான காரோட்டல் மற்றும் பாப்பராஸி புகைப்படக்காரர்கள் டயானாவின் காரை மோசமான முறையில் துரத்தி வந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications