விரும்பிய நெட்வொர்க்குக்கு மாறும் வசதி... மூன்றாவது முறையாக தள்ளி வைப்பு!
டெல்லி: நம்பரை மாற்றாமல் எந்த மொபைல் நெட்வொர்க்குக்கும் மாறிக் கொள்ளும் வசதியை (Mobile Number Portability - MNP) அளிப்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
மார்ச் மாதத்துக்குள் இந்த வசதி செய்யப்பட்டுவிடும் என்று தெரிவித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை, இப்போது ஜூன் 30 வரை கெடுவை நீட்டித்துள்ளது.
இப்படி கால நீட்டிப்பு செய்வது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே இந்த வசதியை அளித்துவிடுவோம் என தெரிவித்திருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் தனியார் மொபைல் ஆபரேட்டர்களிடம் இதற்கான வசதிகள் இல்லாததால், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் மார்ச் 12-ம் தேதி நகர்ப்புறப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும், மார்ச் 31-ம் தேதி பிற பகுதிகளில் உள்ளவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுவிடும் என உறுதி கூறியது மத்திய அரசு.
ஆனால் இந்த முறையும் இந்த கெடுவை மத்திய அரசால் காப்பாற்ற முடியவில்லை.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்பு இணை அமைச்சர் குருதாஸ் காமத் கூறுகையில், "அனைத்து தனியார் மொபைல் ஆபரேட்டர்களும் ஒன்று போல தொழில்நுட்ப வசதியைப் பெற்றிருக்கவில்லை. சில மொபைல் ஆபரேட்டர்கள் இன்னும் பழைய டெக்னாலஜியையே பயன்படுத்துவதால், 'மொபைல் போர்டபிலிட்டி மென்பொருளை' பிரயோகிப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே கால அவகாசத்தை நாங்கள் கேட்கவில்லை. தனியார் மொபைல் ஆபரேட்டர்கள்தான் கேட்கிறார்கள். எனவே வேறு வழியில்லை. வரும் ஜூன் 30 ம் தேதிக்குள் நிச்சயம் இந்த வசதியை ஏற்படுத்தித் தருவோம்.
அதற்கு முன், அதாவது மே மாதத்திலேயே அனைத்து நெட்வொர்க்குகளும் இந்த போர்டபிலிட்டி கேட்வே மென்பொருளை அப்டேட் செய்திருக்க வேண்டு என உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதில் முக்கியமானது, தனியார் நெட்வொர்க்குகள் மட்டுமல்ல... அரசு நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்லும் கூட இன்னமும் இந்த வசதியைப் பெற்றிருக்கவில்லையாம்.
மே 15-ம் தேதிக்குள் அனைத்து நிறுவனங்களும், இந்த மொபைல் போர்ட்பிலிட்டி கேட்வே மென்பொருளையை ஆக்டிவேட் செய்து தயாராக இருக்க வேண்டும் என்றும், ஜூன் மாதத்தில் அனைத்து உபயோகிப்பாளருக்கும் இந்த வசதியை அளித்துவிட வேண்டும் என்றும் அரசு அறிவிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications