நேர்மையான அரசியலை நடத்தும் தேமுதிக சந்தித்துள்ள சத்திய சோதனை- விஜயகாந்த்
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு நேர்மையான அரசியல் நடத்தப் பெறவும், நல்லவர்கள் அரசியலில் ஈடுபடவும் நாம் இந்த சத்திய சோதனையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம். ஆகவே இந்த தோல்வி என்பது நம்முடைய வெற்றிப்பாதையில் ஒரு படிக்கல்லே தவிர தடைக்கல் அல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு நாம் எதிர்பாராதது அல்ல. ஆயினும் தமிழ்நாடு எவ்வளவு சீரழிந்து கிடக்கிறது என்பதையும் அதை செப்பனிடுவது இன்றைய தலைமுறையினருக்கு ஒரு இமாலய சவாலாக இருக்கிறது என்பதையும் இந்த முடிவு எடுத்துக்காட்டுகின்றது.
வேண்டாதவர்களை நீக்குவதற்கும், வேண்டியவர்களை கொண்டுவருவதற்கும் ஜனநாயகத்தில் மக்களுக்கு பயன்படும் கருவி தான் தேர்தல்கள். ஆனால் வேண்டாதவர்களாக இருந்தாலும் பணம் தந்தால் வெற்றிபெற முடியும் என்ற நிலை ஜனநாயகத்தையே சவக்குழிக்கு அனுப்பிவிட்டது.
ஒரு புறத்தில் பணத்தைக் கொண்டு தேர்தல்களை சந்திக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியலில், தே.மு.தி.க. இடம்பெறவில்லை என்பதை மாற்றாரும் உணர்வார்கள். எல்லா பத்திரிகைகளும் தே.மு.தி.க. ஒன்றுதான் நேர்மையாக தேர்தலை சந்தித்தது என்பதை தெளிவாக்கிவிட்டனர்.
தமிழ்நாட்டில் ஒரு நேர்மையான அரசியல் நடத்தப் பெறவும், நல்லவர்கள் அரசியலில் ஈடுபடவும் நாம் இந்த சத்திய சோதனையில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம். ஆகவே இந்த தோல்வி என்பது நம்முடைய வெற்றிப்பாதையில் ஒரு படிக்கல்லே தவிர தடைக்கல் அல்ல.
குடிக்கும் தண்ணீர் முதல் படிக்கும் பள்ளிக்கூடம் வரை, வரவேண்டிய மின்சாரத்தில் இருந்து ஏறும் விலைவாசி வரை அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களையப்படவில்லை. தமிழர்கள் உலகெங்கும் இரண்டாம் தர குடிமக்களாக அவதியுறுகின்றனர்.
தமிழ் மொழிக்கு அந்தஸ்து மறுக்கப்படுகிறது. இவ்வாறு நெடுங்காலமாக தீராத பிரச்சினைகளை எல்லாம் நம்மை நிலைகுலைய செய்கிறது. எந்த ஊழல் வழக்குகளிலும் சிக்காத நாம் தானே இவற்றை தீர்க்க பாடுபடமுடியும் என்ற நிலைதான் இன்றைய அரசியலில் ஏற்பட்டுள்ளது. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்''. தர்மத்தை நிலைநாட்ட மேலும் நாம் நம்மை அர்ப்பணித்துக்கொண்டு முழு மூச்சுடன் நம் பயணத்தை தொடர்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications