நக்சல்களை ஒழிக்க விமானப்படை தேவையில்லை: தளபதி பி.வி.நாயக்
டெல்லி: நக்சலைட்டுகளுக்கு எதிராக இந்திய விமானப் படையை பயன்படுத்துவது சரியானதாக இருக்காது என்று இந்திய விமானப் படை தளபதி பி.வி.நாயக் தெளிவு படுத்தி உள்ளார்.
சட்டிஸ்கர் மாநிலம் தாண்டேவாடா வனப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நேற்று மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 75 வீரர்கள் பலியானார்கள்.
மிகப்பெரிய தாக்குதலாக கருதப்பட்டதால், நக்சல்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா, அவர்கள் கட்டுப்படுத்த விமானப் படை பயன்படுத்தப்படுமா என்பது குறித்த கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து சட்டிஸ்கரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தேவைப்பட்டால் விமானப்படையை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
இதுகுறித்து விமானப் படை தளபதி பி.வி.நாயக் கூறுகையில்,
'அடிப்படையில் நக்சல்கள் நமது நாட்டின் குடிமக்கள். அவர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது. 120 சதவீதம் அவர்கள் நமக்கு எதிரிகள் என உறுதிபடுத்தப்பட்ட பின்னரே விமானப்படை அவர்கள் மீதான தாக்குதல் நடத்த முடியும்.
மேலும், உள்நாட்டு அச்சுறுத்தலுக்கு விமானப் படையை பயன்படுத்துவது பொருந்தாது. நம்முடைய விமானப்படையின் திறன்கள் அனைத்தும் அண்டை நாட்டு எதிரிகளோடு போராடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
உள்துறை அமைச்சக செயலாளர் ஜிகே பிள்ளையும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார். தற்போது நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கையாள துணை ராணுவப்படையினரே போதுமானவர்கள் எனறு அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications