ஐபிஎல்: சசி தரூர் விவகாரம்-விசாரித்துவிட்டு நடவடிக்கை: பிரதமர்

அதே நேரத்தில் சசி தரூர் பதவி விலகத் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பாஜகவி்ன் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
ஐ.பி.எல்லில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட கொச்சி அணியை ரூ.1,533 கோடிக்கு ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.
கொச்சியை தலைமை இடமாக கொண்ட இந்த அணியால் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் சசி தரூர் பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தரூர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, 2வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இப்போது அவரையும் விவாகரத்து செய்துவிட்டு காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. அழகு கலை நிபுணரான இவர் துபாயில் வசித்து வருகிறார்.
ஐ.பி.எல். கொச்சி அணியில் சுனந்தாவுக்கு 18 சதவீத பங்குகள் (ரூ.70 கோடி மதிப்பு) இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக 2 நாட்களுக்கு முன் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி இந்த தகவல் வெளியிட்டார்.
சுனந்தா இந்த பங்குகளைப் பெற சசி தரூர் உதவியதாகவும், அதே நேரத்தில் ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் விவரத்தை வெளியிட வேண்டாம் என்று லலித் மோடியை சசி தரூர் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதுதொடர்பாக, சசி தரூரை பதவி நீக்கம் செய்யுமாறும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறும் பாஜக கோரிக்கை விடுத்தது. சசிதரூர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சுனந்தாவுக்கு பங்குகளை வாங்கி கொடுத்திருப்பதால் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று பாஜக கூறியுள்ளது.
இதனால் சசி தரூருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை அழைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விசாரணை நடத்தினார். இதனால் தரூர் பதவி நீக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின.
ஆனால், சசி தரூரை பதவி நீக்கம் செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், பாஜகன் கோரிக்கை கேலிக்கூத்தானது. சசி தரூர் பதவி விலகத் தேவையில்லை. தென்னிந்தியாவில் கேரளாவில் மட்டும்தான், ஐ.பி.எல். அணி இல்லாமல் இருந்தது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய இதர மாநிலங்களில் அணிகள் உள்ளன.
எனவே, கேரளாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற முறையில், தனது மாநிலத்துக்கு ஒரு ஐ.பி.எல். அணி வேண்டும் என்று தரூர் விரும்பினார். இதில் எந்தத் தவறும் இல்லை. அவரது விருப்பம் தவறானது அல்ல. அவரது அக்கறையை பாராட்டுகிறோம்.
இதனால் கட்சிக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படாது.
இந்தப் பிரச்சனையில் பண விஷயத்தில் எங்களுக்கு எந்த சம்பந்தம் இல்லை. மேலும் பண விஷயத்தில் தனக்கும் தொடர்பில்லை என்று சசி தரூரும் மறுத்துள்ளார்.
பண விஷயம் குறித்து கிரிக்கெட் வாரியம் தான் விளக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில், தரூர் மீதான குற்றச்சாட்டு குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும்.
லலித் மோடிக்கு சசிதரூர் டெலிபோன் செய்ததாக கூறுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில், அமைச்சர்கள் பலருக்கு போன் செய்வார்கள். அதில் என்ன தப்பு என்றார் அகமத்.
விசாரித்தது தப்பா?-தரூர்:
இந் நிலையில் சசி தரூர் நிருபர்களிடம் கூறுகையில், லலித் மோடியுடன் தொலைபேசியில் பேசியது உண்மை. ஆனால், அவரை நான் மிரட்டவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கொச்சி அணியின் விற்பனை தாமதமாவது குறித்து மட்டுமே கேட்டேன். இது எப்படி தவறாகும் என்றார்.
மேலும் லலித் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசி தரூர் தனது டிவிட்டர் பதிவில் அளித்துள்ள விளக்கத்தில், கொச்சி அணியில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. நான் வெறும் ஆலோசகர் என்ற முறையிலேயே செயல்படுகிறேன்.
தடுக்க முயன்ற மோடி:
ஐபிஎல் ஏலத்தின் போது கொச்சி அணி உருவாக்கப்படுவதை தடுக்க மோடி அனைத்து வழிகளிலும் முயன்றார்.
அகமதாபாத் நகருக்காக ஒரு அணியை உருவாக்க அவர் ஆதரவு தெரிவித்தார். லலித் மோடி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுக்கிறேன் என்று கூறியுள்ளார் தரூர்.
இதனிடையே மோடியின் கருத்து தொடர்பாக கொச்சி அணியின் சார்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
விசாரித்துவிட்டு நடவடிக்கை-பிரதமர்:
இந் நிலையில் வாஷிங்டனில் சுற்றுப் பயணத்தில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, இது தொடர்பாக முழு விவரமும் என்னிடம் இல்லை. நாடு திரும்பிய பின் முழுமையாக விசாரித்துவிட்டு, தேவைப்பாட்டால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். வெறும் ஊடக செய்திகளை வைத்து எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார்.
சோனியா ஆலோசனை:
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆண்டனி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications