மதுரை- சிவகங்கை மாவட்டங்களுக்கு காவிரி நீர்: ரூ.806 கோடியில் திட்டம்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் 22வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதில், காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு மதுரை மாவட்டத்திலுள்ள 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 1,430 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
முதலில் மதுரை மாவட்டம் மேலூர், திருமங்கலம், அவனியாபுரம் நகராட்சிகள், எ.வெள்ளாளப் பட்டி, பரவை, விளாங்குடி, திருநகர் பேரூராட்சிகள் மற்றும் 155 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டமாக ரூ.291.31 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இத்திட்டத்தினை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1,275 ஊரகப் பகுதிகளுக்கும் நீட்டித்திடும் வகையில் திருத்தி வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது, இத்திட்டமானது காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், திருமங்கலம், அவனியாபுரம் ஆகிய 3 நகராட்சிகள், அ.வெள்ளாளப்பட்டி, பரவை, விளாங்குடி, திருநகர் பாலமேடு மற்றும் அலங்கா நல்லூர் ஆகிய 6 பேரூராட்சிகள், 1,430 ஊரக குடியிருப்புகள் மற்றும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம் புணரி பேரூராட்சிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் என திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.806 கோடி.
இத்திட்டம், 22.03.2010 அன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதிகாரம் அளிக்கப்பெற்ற குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இன்று நடைபெற்ற அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவில் இப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் இந்த திட்டத்திற்கு அரசின் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு செயலாகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
கூட்டத்தில் நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஸ்வரன் சிங், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு செயலாளர் அனிதா பிரவீன் மற்றும் குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
