Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்ச்சை உலகில் வாழ்ந்து வீழ்ந்த சசி தரூர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஊழல் புகாரில் சிக்கி பதவியை இழந்த முதல் அமைச்சர் என்ற பெருமை சசி தரூருக்குக் கிடைத்துள்ளது.

ஐ.நா. பதவியிலிருந்து ஓய்வு பெற்று இந்தியாவுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டது முதலே சர்ச்சையில்தான் வாழ்ந்து வந்தார் தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி ஒரு சர்ச்சை, தேவையில்லாமல் வாயை விடுதல் என்று காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டார் தரூர். இவரைப் போல மத்திய அரசுக்கும், காங்கிரஸுக்கும் தலைவலியைக் கொடுத்தவர்கள், சமீபத்தில் யாருமே இல்லை என்று கூறலாம்.

எதிர்க்கட்சியினர் கூட இந்த அளவுக்கு டார்ச்சர் செய்ததில்லை என்று கூறும் அளவுக்கு தேவையே இல்லாமல் பல சிக்கல்களை ஏற்படுத்தி வந்தார் தரூர். இருந்தாலும் கேரள லாபி காரணமாக பல்லைக் கடித்துக் கொண்டு தரூரை பொறுத்து வந்தார் சோனியா. ஆனால் தற்போது நிலைமை எல்லை மீறிப் போய் விட்டதால் அரசின் பெயரையும், காங்கிரஸ் பெயரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக தரூரை நீக்கும் முடிவுக்கு சோனியா வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினையிலும் கூட தரூரைக் காப்பாற்ற கேரள லாபி கடுமையாக முயன்றதாக கூறப்படுகிறது. தரூரின் தோழி சுனந்தா தனது பங்குகளை விட்டு விடத் தயாராக இருப்பதாகவும், இதன் மூலம் அரசுக்குப் பிரச்சினை இருக்காது எனவும் அந்த லாபி கூறிப் பார்த்தது. அதற்கேற்ப, நான பங்குகளைக் கைவிட தயார் என்று சுனந்தாவும் அவசரம் அவசரமாக ஒரு அறிக்கை விட்டார்.

ஆனால் பாஜக விடவில்லை. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், சுனந்தா புஷ்கர் பங்குகளைக் கைவிட்டால், தரூர் ஊழல் புரிந்துள்ளார், தவறு நடந்துள்ளது, தனது செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளார், லலித் மோடியை மிரட்டினார் என்பது அனைத்தும் உண்மையாகி விடும்.

சுனந்தா பங்குகளைக் கைவிடுவதோடு நின்றால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். தரூர் போக வேண்டும் என திட்டவட்டமாக கூறினார். இதையடுத்தே தரூரால், நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு தர்மசங்கடம் ஏற்படுவதை சுத்தமாக விரும்பாத சோனியா காந்தி, தரூரை நீக்கும் முடிவுக்கு வந்தார் என்கிறார்கள்.

தரூர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர், ஐ.நா.வில் இணை பொதுச் செயலாளராக இருந்தவர். பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிட்டவர். கேரளாவைச் சேர்ந்தவர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டதன் மூலம் கிடைத்த செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள நினைத்த காங்கிரஸ் இவரை அரசியலில் அறிமுகப்படுத்தியது. திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார் தரூர்.

மத்திய அமைச்சரவையிலும் இவருக்கு முக்கியமான வெளியுறவு இணை அமைச்சர் பதவியைக் கொடுத்த அழகு பார்த்தார் சோனியா.

ஆனால் வந்தது முதல் இவரால் ஏற்பட்ட வம்புகள்தான் அதிகம். ஆரம்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வந்தார். வேலையை விட ட்விட்டர் மூலம் தகவல்களை அனுப்புவதையே பிரதானமாக கொண்டிருந்தார்.

பல முக்கியப் பிரச்சினைகளைக் கூட சர்வ சாதாரணமாக ட்விட் செய்து வந்ததால் காங்கிரஸ் கட்சியும், பிரதமரும் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக தனது வேலைப்பளு குறித்து இவர் அனுப்பிய ட்விட்டர் செய்தி மத்திய அரசை கடுமையாக எரிச்சலில் ஆழ்த்தியது. பிரதமரும், சோனியாவும், தரூரைக் கூப்பிட்டு எச்சரிக்கும் அளவுக்கு அது போனது.

பின்னர் விமானத்தில் உள்ள எக்கானமி வகுப்பை மாட்டுத் தொழுவம் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரும், அவரது உதவியாளரும் ரொம்பக் கஷ்டப்பட்டு உட்கார்ந்திருப்பதைப் போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு காங்கிரஸை கடும் டென்ஷனுக்குள்ளாக்கினார்.

இவர் இப்படி என்றால் இவரது உதவியாளரான ஜேக்கப் ஜோசப், ஒரு முறை, மத்திய அமைச்சர்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை. யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ட்விட்டர் செய்தியை அனுப்பி டென்ஷனைக் கூட்டினார்.

இப்படி தொடர்ந்து சர்ச்சை உலகிலேயே வாழ்ந்து வந்த தரூர் லேட்டஸ்டாக சிக்கியதுதான் சுனந்தா புஷ்கர் மற்றும் ஐபிஎல் கொச்சி விவகாரம். சுனந்தாவும் இவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. இது காங்கிரஸை தர்மசங்கடப்படுத்தியது.

இதன் உச்சமாக ஐபிஎல் கொச்சி விவகாரம் வந்து சேர்ந்தது. இதுதான் தரூரை தூக்க சரியான தருணம் என முடிவு செய்து தற்போது அவரை அனுப்பி வைத்து விட்டு நிம்மதியாகியிருக்கிறது காங்கிரஸ்.

முன்னதாக கொச்சி அணியில் தனக்குள்ள ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகளை விட்டுக் கொடுப்பதாக சுனந்தா புஷ்கர் அறிவித்தார். ஆனால் அது காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்த முடியவில்லை.

துபாயில் வசித்து வரும் 48 வயதான சுனந்தா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், எனது பெயரைக் கெடுக்கும் வகையில் சில விஷம சக்திகள் செயல்படுகின்றன.

ஒரு பெண்ணாக எனக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. எனது நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது வேதனை தருகிரது. ரெண்டஸ்வஸ் நிறுவனம் எனக்கு அளித்துள்ள பங்குகளை நான் திருப்பிக் கொடுக்க விருப்பமாக, தயாராக உள்ளேன். இதை அந்த நிறுவனத்திற்கும் தெரிவித்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் சுனந்தாவின் இந்த அறிக்கையால் தரூரின் பதவியைக் காப்பாற்ற முடியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+