வேட்பாளரின் வெற்றியை ஒரு ஓட்டு வித்தியாசம் கூட தீர்மானிக்கும் - நவீன் சாவ்லா
மதுரை: ஒரு சில இடங்களில் வேட்பாளரின் வெற்றியை, ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம் கூட தீர்மானிக்கும் சூழ்நிலை உள்ளது என்று இந்திய தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
மதுரையில் டாடா - தானம் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லா கலந்து கொண்டு பேசுகையில்,
கடந்த 2009 தேர்தலில் 71.4 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் 82 சதவீதம் பேர் அடையாள அட்டை பெற்றிருந்தனர்.
குஜராத் 'கிர்' காட்டில் ஒரே ஒரு வாக்காளருக்காக ஓட்டுச்சாவடி-யும், இரு தேர்தல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
காஷ்மீர் லடாக் பகுதியில் 15 ஆயிரத்து 300 அடி உயரத்தில், சன்ஸ்கார் தொகுதிக்கான ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. 45 கி.மீ தூரம் மலைப்பாதையை கடந்து, 37 வாக்காளர்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டது. இதை நாம் ஜனநாயகத்தின் உச்சம் என்று கூட கூறலாம்.
வாக்காளர் பட்டியல் சரியாக இல்லாவிட்டால், ஓட்டுப்பதிவும் சரியாக இருக்காது. நூறு கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வாழ்கைக்காக இடம் பெயர்வது தவிர்க்க முடியாதாது ஆகி விட்டது.
எனவே, இதனால் பல லட்சக்கணக்கான மக்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு போக வாய்ப்பு ஏற்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்ப்ட போதிலும், இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் தொடர்வதும், இறந்து போன வாக்களர்கள் பெயர் இடம் பெறுவதும் தேரத்ல் கமிஷினின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது. இதுவே, ஆள்மாறாட்டம், கள்ளஓட்டு, போன்ற தேர்தல் முறைகேட்டிற்கு வழிகோலுகிறது.
ஒருசில இடங்களில் வேட்பாளரின் வெற்றியை, ஒரே ஒரு ஓட்டுவித்தியாசம் கூட தீர்மானிக்கும் சூழ்நிலை உள்ளது.
இச்சூழலில் ஆள்மாறாட்டமும், கள்ள ஓட்டும், தேர்தலின் நியாய தன்மைக்கு சவாலாக உள்ளது. இந்தியா, ஜாதிகளால் பிளவுபட்டுள்ளது.
ஜாதி அடிப்படையிலான சமூக கட்டமைப்பு, இன்றும் கிராமங்களில் உள்ளது. ஜாதிய அடக்குமுறைக்கு உள்ளான மக்கள், தேர்தல் காலங்களில் உயர் ஜாதியினரால் அச்சுறுத்தப்படுவது நேர்மையான, வெளிப்படையான தேர்தலுக்கு சவாலாக உள்ளது.
தேர்தல் கமிஷன் இது போன்ற பதட்டமான பகுதிகளை இனங்கண்டு கடந்த தேர்தலில் 86 ஆயிரத்து 782 கிராமங்கள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.












Click it and Unblock the Notifications