காரைக்கால் அருகே சாலை விபத்து – சென்னையைச் சேர்ந்த 5 பேர் பலி
காரைக்கால்: சென்னையைச் சேர்ந்த ஒரு கார் காரைக்கால் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கியது. இதில் காரில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை திருவொற்றியூர் காசிவிசுவநாத குப்பத்தை சேர்ந்தவர் முத்தையன் (40) . எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் வேலை பார்த்தார். இவரது மனைவி சுந்தரி. இவர்களுடைய மகள்கள் கனகா, சவிதா (12), ஜனா (7). மகன் சரண்.
முத்தையன் தனது குடும்பத்தினர் மற்றும் மாமியார் செண்பகவல்லி அண்ணி ஆகியோருடன் திருவாரூரை அடுத்த எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
பின்னர் அவர்கள் நேற்று இரவு காரில் ஊர் திரும்பினர். காரைக்காலை அடுத்த தரங்கம்பாடியை சேர்ந்த டிரைவர் வேல்முருகன் காரை ஓட்டி சென்றார்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் காரைக்காலை அடுத்த ராயன்பாளையம் பகுதியில் வந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி படுசேதமடைந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே முத்தையன், சவிதா, சரண், செண்பகவல்லி, டிரைவர் வேல்முருகன் ஆகியோர் காரின் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். முத்தையன் மனைவி சுந்தரி மற்றும் கனகா, ஜனா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து பற்றி அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications