இந்தியா வருகிறார் வாரன் பஃபெட்... முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு!

உலகின் பெரிய பணக்காரர்களில் முக்கியமானவர் வாரன் பஃபெட். பெரிய முதலீட்டாளர் இவர். பெர்க்ஷையர் ஹதாவே என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம்தான் கோக கோலா கம்பெனியில் கணிசமான அளவு பங்குகளைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே வாரன் பஃபெட் முதலீடு செய்திருப்பது மிகக் குறைவுதான். அப்படிப்பட்டவர் முதல் முறையாக இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பெர்க்ஷையர் ஹதாவேயின் செய்திக் குறிப்பு கூறுகிறது. இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக வாரன் பஃபெட்யும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வருகிறார் பஃபெட். இதுகுறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில், "முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்ய வாரன் பஃபெட் திட்டமிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் கண்டுள்ளது இந்தியா. இந்த சூழலில் எந்த அளவு முதலீட்டை இந்தியாவும் அமெரிக்காவும் அனுமதிக்கும் என்று ஆராய்ந்து வருகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளது.
ஆசியாவில் மூன்று நாடுகளில் மட்டுமே வாரன் பஃபெட் முதலீடு செய்துள்ளார். தென் கொரியாவின் போஸ்கோ, சீனாவின் பிட் மற்றும் இஸ்ரேலில் மட்டுமே இவரது முதலீடுகள் உள்ளன.
இந்தியாவில் இன்ஸுரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய பெர்க்ஷையர் விரும்புவதாக பஃபெட் தெரிவித்துள்ளார்.
பெர்க்ஷையரின் மறு காப்பீட்டு வர்த்தகத்தை தலைமையேற்று நடத்துபவர் அஜீத் ஜெயின் என்ற இந்தியர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications