Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'தலித்': கருணாநிதி மீது ஜெயலலிதா கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கு காரணம், தொலைதொடர்புத் துறை அமைச்சரான ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பது தான் என்று டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருக்கிறார் கருணாநிதி!

தன்னுடைய கட்சிக்காரரால் நிகழ்த்தப்பட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை எந்த அளவுக்கு முக்கியத்துவமில்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக ஒரு முடிவு எடுப்பதற்கு முன் தன்னிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் பிரத்யேக அறிவுரையை மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராசா முற்றிலுமாக அவமதித்தது,

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை முதலில் வருபவருக்கு முதலில் அளிப்பது என்ற கோட்பாட்டிற்கு இந்திய தொலைதொடர்பு முறைப்படுத்தும் ஆணையம் தெரிவித்த எதிர்ப்புகளை புறக்கணித்தது,

சினிமா டிக்கெட்டை விற்பனை செய்வது போல், ஸ்பெக்ட்ரம் உரிமத்தை விற்பனை செய்யும் முடிவை ராசா எடுத்திருக்கிறார் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது,

ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் பெறுவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பத் தேதியினை முன் தேதியிட்டு ராசா மாற்றியமைத்தது தவறு என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது,

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ராசா எடுத்த முடிவின் காரணமாக குறைந்தபட்சம் ரூ. 26,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற இந்திய கணக்குத் தணிக்கைத் தலைவர் கோடிட்டுக் காட்டியது,

ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் கோரியது போன்ற பிரச்சனைகள் எதற்கும் கருணாநிதி பதில் அளிக்கவில்லை.
மாறாக, ராசா தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதற்காகவே இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இது போன்ற பதிலின் மூலம், நாடாளுமன்றத்தில் ராசாவின் ராஜினாமாவைக் கோரும் தலித் தலைவர்களின் வாயை அடைத்துவிடலாம் என்று நினைக்கிறார்.

தன்னுடைய தேர்தல் தொடர்பான தேவைகளுக்கு எப்பொழுதெல்லாம் பொருத்தமாய் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் தன்னுடைய மருமகள் தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, தலித் இனத்துடன் தனக்குள்ள நெருக்கத்தை காட்டிக் கொள்பவர் கருணாநிதி.

ஆனால், தன்னுடைய முந்தைய அமைச்சரவை சகாவான திமுக தலித் தலைவர் ஓ.பி.ராமனின் மைத்துனியை அழகிரி திருமணம் செய்தபோது, கருணாநிதி நிலைகுலைந்து போனதையும், அழகிரியை மதுரைக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டதையும் மூடி மறைத்துவிட்டார்.

இதன் காரணமாகத்தான், திமுகவில் இரண்டாம் இடத்திற்கான போட்டியில் அழகிரி பின்னுக்குத் தள்ளப்பட்டு, தன்னுடைய இனத்திலேயே பெண் எடுத்த இளைய மகன் ஸ்டாலினை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் கருணாநிதி.

இது போன்ற தவறான எண்ணத்தையும், அறுவெறுப்பையும் தலித் இனத்தவர் மீது கொண்டுள்ள அதே கருணாநிதி தான், ஊழல் கறை படிந்துள்ள ராசாவை எதிர்த்து குரல் எழுப்பும் எதிர்க்கட்சிகள் மீது, அவர் தலித் என்பதாலேயே அவருக்கு எதிராக குரல் எழுப்புவதாக குற்றம் சுமத்துகிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தன் குடும்ப கருவூலத்தில் சென்றடைந்துள்ளதை மூடி மறைத்து பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே தலித் என்ற ஆயுதத்தை கருணாநிதி பயன்படுத்துகிறார்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ராஜ்யசபாவில் அதிமுக வெளிநடப்பு:

இந் நிலையில் அமைச்சர் ராசாவைப் பதவி நீக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் இன்று அதிமுக எம்பிக்கள் கோஷமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை கூடியதும், அமைச்சர் ராசா, நிரா ராடியா ஆகியோரின் உரையாடல்கள் பதிவுசெய்யப்பட்ட சிடிக்களையும், அதுதொடர்பாக வெளிவந்த செய்தித் தாள்களையும் அதிமுக எம்பிக்கள் காட்டி கோஷமிட்டனர்.

அப்போது பேசிய அதிமுக எம்பி மைத்ரேயன், ராசா உரையாடலை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதுதொடர்பாக விவாதிக்க கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றப நோட்டீஸ் தந்துள்ளேன் என்றார்.

இதையடுத்து, அவையில் செய்தித் தாள்களையோ, சிடிக்களையோ காட்டக்கூடாது என்று அவைத் தலைவர் அன்சாரி அதிமுகவினருக்கு நினைவூட்டினார்.

எம்பிக்கள் அவரவர் இருக்கைகளில் அமர வேண்டும் என்று பலமுறை அன்சாரி கேட்டுக் கொண்டும் அதை அதிமுகவினர் ஏற்கவில்லை.

ராசாவை பதவி நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதால் அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோதும் அதிமுக எம்பிக்கள் அதே கோரி்க்கையை மீண்டும் வலியுறுத்தி கோஷமிடவே, இது பொறுப்பற்ற செயல் என்று எச்சரித்த அன்சாரி, அதிமுக எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

இதையடுத்து அதிமுக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பியவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+