அதிமுக வெளிநடப்பில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை-கருணாநிதி
சென்னை: அதிமுக வெளிநடப்பில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தும் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் எழுந்து, தமிழக அரசின் டிட்கோ நிறுவனத்துடன் டாட்டா மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனங்கள் 28.04.2010 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அதில் சில அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும், கைமாறுதல்கள் நடைபெற்றிருப்பதாகவும் நாங்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். அதுகுறித்து இன்றே விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
அதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன், இன்று காலையில்தான் அதுபற்றி விபரம் கொடுத்திருக்கிறீர்கள். அதை நான் படித்து பார்க்கவில்லை. சம்பந்தப்பட்ட துறையிடம் அதை கொடுத்து அவர்கள் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும். எனவே இப்போது விவாதத்துக்கு எடுத்து கொள்ள முடியாது என்றார்.
உடனே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அந்தப் பிரச்சனையை உடனே விவாதத்துக்கு எடுத்துச் கொள்ள வேண்டும் என்று கூச்சலிட்டனர்.
அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி குறுக்கீட்டு, உங்கள் ஆட்சியின் போது நாங்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தால் எதையும் எடுத்துக் கொண்டதேயில்லை. பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி அதை விவாதத்துக்கே எடுப்பததில்லை. நீங்கள் காலையில் கொடுத்து விட்டு உடனே விவாதிக்க வேண்டும் என்பதும், அதை வற்புறுத்தி அனைவரும் எழுந்து நிற்பதும் சரியல்ல என்றார்.
இதையடுத்து சபாநாயகர், இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை இப்போது எடுக்க முடியாது. படித்து பார்த்து விட்டு முடிவு செய்கிறேன் என்றார்.
உடனே அதிமுகவினர் இன்றே விவாதத்துக்கு எடுக்க வேண்டும் என்றனர். சபாநாயகர் ஏற்காததால் அக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி,
எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், தங்களிடத்திலே காலையிலே 9 மணி 10 நிமிட அளவில் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொடுத்துவிட்டு, அதை உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கிராமங்களிலே சொல்வார்களே, அதைப்போல, 'அழிச்சாட்டியம் செய்து', இந்த அவையிலிருந்து வெளியேறிச் சென்றார்கள்.
அது ஏதோ பூதாகரமான விஷயம் என்று மக்கள் உணர வேண்டு என்பதற்காக வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.
இதுவொன்றும் பூதாகரமான விஷயம் அல்ல. சொல்லப் போனால், பெங்களூரிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற (ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு)அந்த வழக்கைப் போன்றது கூடல்ல இது என்பது எல்லோருக்கும் தெரியும்.
பெங்களூரிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அளவுக்கு மீறிய சொத்து சேர்த்த வழக்கு எத்தனை ஆண்டு காலம் நடைபெறுகிறது?, ஏன் நடைபெறுகிறது என்ற கேள்விகளைப் பற்றியெல்லாம் கூட, உறுப்பினர்கள் இங்கே வினா எழுப்பி, அதை இந்த அவையிலே கொண்டு வர வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். அதையும் நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவசரப்பட்டு அதை அவைக்குக் கொண்டு வரவில்லை.
ஆனால், இவர்கள் ஏதோ மாமல்லபுரம் சாலையில் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக நடைபெற்றிருக்கின்ற ஒப்பந்தம் குறித்து ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொடுத்து விட்டு, அதை எடுத்துக் கொள்ளவில்லை என்பதைச் சாக்கிட்டு வெளியிலே சென்றிட, வெளி நடப்புச் செய்து, பத்திரிகைகாரர்களிடத்திலே பூதாகரமாக எடுத்துச் சொல்லத் திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.
இந்த மாமன்றத்தினுடைய அலுவல்கள் 14, 15 தேதியோடு முடிவுற்று நாமெல்லாம் ஓர் இடைக் காலத்தைச் சந்திக்கக் கூடிய சூழ்நிலையில், பிரசாரம் செய்வதற்கு இந்த வெளிநடப்பும், இந்தக் குறுக்கீடும் பயன்படுமே தவிர, இதில் எந்த விதமான சாரமும் இல்லை, சத்தும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சட்டசபை வளாகத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் சட்டசபையில் இருந்து வெளியே வந்த அதிமுக உறுப்பினர்கள் வளாகத்தில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பன்னீர்செல்வம் கூறுகையில்,
டிட்கோ நிறுவனம் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அது பற்றி விவாதம் நடத்த அனுமதி கேட்டோம். அதற்கு சபாநாயகர் அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
அதிமுக பெண் எம்எல்ஏ மீது கொலை மிரட்டல் வழக்கு:
இந் நிலையில் நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ இளமதி சுப்ரமணியம் மற்றும் அவரது கணவர் உட்பட 22 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொகுதி எம்.எல்.ஏவான இளமதியின் கணவர் சுப்ரமணியம் 2008ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சேவியர் என்பவரிடம் நிலம் வாங்கினார்.
ரூ. 5 லட்சம் விதம் இரண்டு தவணையாக ரூ.10 மட்டும் தந்த சுப்பிரமணியம் மீதிப் பணத்தை தரவில்லை.
இதையடுத்து மீதிப் பணத்தைத் தருமாறும், நிலத்தை பத்திரப்பதிவு செய்துக் கொள்ளுமாறும் சேவியர் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் எம்எல்ஏவும் அவரது குடும்பத்தினரும் பணத்தைத் தரவில்லை. இதனால் சேவியர் அந்த நிலத்தை மற்றொருவரிடம் விற்றார்.
இதையடுத்து சுப்ரமணியம் மீண்டும் அந்த நிலத்தை தங்களிடமே தருமாறு மிரட்டினார்.
ஆனால் சேவியர் அந்த நிலத்தை மற்றொரு நபரிடம் விற்று விட்டதாகவும், அதற்கு பதில் வேறொரு நிலத்தையோ அல்லது நீங்கள் தந்த பணத்தையோ திருப்பித் தருவதாகவும் கூறினார்.
இதை எம்எல்ஏ தரப்பு ஏற்காததால் மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் சேவியருக்கு சுப்பிரமணியம் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சேவியர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் எம்.எல்.ஏ இளமதி மற்றும் அவரது கணவர் மற்றும் உட்பட 22 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் சட்டசபையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது அவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். அப்போது தனது ஜாக்கெட்டை காவலர்கள் கிழித்துவிட்டதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் இளமதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications