பிரபாகரன் பெயரை பச்சை குத்திய நிலையில் இறந்தவர் மதுரைக்காரர்
மதுரை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரை மார்பில் பச்சை குத்திய நிலையில் தாராபுரத்தில் இறந்து கிடந்தவர் மதுரையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் அவருக்கும் புலிகள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, பிரபாகரனின் தீவிர அனுதாபி மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது.
தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் கடந்த 7ம் தேதி காலை, 41 வயது மதிக்கத்தக்க ஆண் திடீரென இடது கால், கை செயல்படாமல் மயங்கி விழுந்தார். பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தவர்கள், மயங்கி விழுந்த நபரை, அங்கு தயாராக நின்றிருந்த ஆம்புலன்சில் ஏற்றி, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின், வலது மார்பகத்தின் மேல், 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என பச்சை குத்தியிருந்ததைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார், அவரிடம் விசாரிக்க முற்பட்டனர். எப்போது சுய நினைவு திரும்பும் என, டாக்டர்களால் தெரிவிக்க இயலவில்லை. இவர் இலங்கையில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலியா அல்லது ஏதாவது தமிழ் அமைப்பைச் சேர்ந்தவரா என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தாராபுரத்தைச் சேர்ந்த தி.க., பெரியார் தி.க., மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து பார்த்தும், அடையாளம் தெரியவில்லை.
தாராபுரம் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கு போதிய வசதி இல்லாததால், அந்த நபருக்கு மேல் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, அரசு ஆம்புலன்சில் சந்தேக நபர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அதிகாலை 3.30 மணிக்கு இறந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை அந்த நபர் குறித்த மர்மம் விலகியது. அவருடைய பெயர் சரவணன். மதுரை மாவட்டம் மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர். திருப்பூரில் மனைவி ஆதிமுத்துவுடன் வசித்து வந்தார்.
நேற்று மாலை காவல் நிலையத்திற்கு வந்த சரவணனின் மனைவி மற்றும் உறவினர்கள் மூலம் இது தெரிய வந்தது.
கடந்த 7ம் தேதி மதுரையில் உறவினர் இறந்த துக்கம் விசாரிக்க பஸ்சில் சென்ற போது தான், வலிப்பு வந்து இறந்துள்ளார். சரவணன், விடுதலைப்புலிகள் இயக்கம் மீது பற்றுள்ளவர். இதனால் தான், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பெயரை உடலில் பச்சை குத்தியுள்ளார். மற்றபடி அவருக்கும், அந்த இயக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதும் தெரிந்தது.












Click it and Unblock the Notifications