உலக தமிழ் செம்மொழி மாநாடு - 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் அதிரடிப்படையினர்: சைலந்திர பாபு
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாதுகாப்புப் பணிக்கு 24 மணி நேரமும் அதிரடிப்படை போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கோவையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பணிகள் மிக வேகமாக நடக்கின்றன. இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடதப்பட உள்ளனர்.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவினாசி ரோடு வழியாக வரும் வாகனங்கள், பொதுமக்களை 'கொடீசியா' செல்லும் வழியில் இறக்கி விட்டவுடன், வெளியேறி விட வேண்டும். வேன்களை நிறுத்த, காளப்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதே போல் அவினாசி ரோட்டில் வரும் வாகனங்கள், தென்னம்பாளையம் வழியாக காளப்பட்டிக்கு திருப்பி விடப்படும். திருச்சி ரோடு வழியாக வரும் வாகனங்கள், சி.ஐ.டி.பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தங்குவதற்காக 70 லாட்ஜ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவை, தனிப்படை பாதுகாப்பில் கொண்டு வரப்படும். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், மாநாடு நடக்கும் கொடீசியா அரங்கத்துக்கு காந்திபுரத்தில் இருந்து சத்தி ரோடு, சரவணம்பட்டி வழியாக அழைத்துச் செல்லப்படுவர்.
முக்கிய பிரமுகர்களின் வாகனங்களின் பாதுகாப்புப் பணியில் போலீசாருடன், என்.சி.சி.மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் தவிர, பொதுமக்கள் எந்த வகையிலும் சிரமப்படக்கூடாது என்பதற்காக அவினாசி ரோட்டில் வழக்கமான பஸ் போக்குவரத்து இயக்கப்படும்.
மாநாடு நடக்கும் கொடீசியா வளாகத்தில் ஏற்கனவே ஒரு புறநகர் போலீஸ் காவல் நிலையம் உள்ள நிலையில், இது மூன்றாக உயர்த்தப்டும். தவிர, 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாநாடு நடக்கும் பகுதியை கண்காணிக்க 12 இடங்களில் சி.சி.கேமராக்கள் பொருத்தப்படும்.
கோவையில் ஏற்கனவே 11 செக்-போஸ்ட்கள் செயல்படுகின்றன. செம்மொழி மாநாட்டுக்காக மேலும் ஆறு செக்-போஸ்ட் அமைக்கப்படுகின்றன. இவை, அதிரடிப்படையினரின் முழு கட்டுப்பாட்டில் செயல்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications