பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசு ஊழியர்களுடேனேயே எப்போதும் இருப்பேன் - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் அரசு ஊழியர்களுடன்தான் எப்போதும் இருப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 57-வது மாநில மாநாடு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை நடந்தது. இழந்த சலுகைகளை மீண்டும் வழங்கியதற்காகவும், புதிய சலுகைகளை அளித்ததற்காகவும், முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் நன்றி கூறும் பெருவிழாவாக இது கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரை:

நன்றி தெரிவிக்கின்ற மாநாடு என்று இதற்கு நாங்கள் பெயரிட்டிருக்கின்றோம், அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் என்பதை சூரியமூர்த்தி குறிப்பிட்டார். நான் அதைப்பற்றி ஒரு விளக்கம் கூற விரும்புகிறேன். திருக்குறளில் நன்றியைப் பற்றி 2 வரிகளிலே சொல்லப்பட்டிருப்பது- "நன்றி மறப்பது நன்று அன்று - நன்று அல்லது அன்றே மறப்பது நன்று''

இது சூரியமூர்த்திக்கு முழுமையாக பொருந்தும். அவர் ஏதாவது எனக்கு நன்று அல்ல செய்திருப்பாரேயானால், அதை உடனே மறந்துவிடு என்று வள்ளுவர் எனக்கு ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆணையை நிறைவேற்றுகின்ற வகையிலேதான் இந்த மாநாட்டிற்கு நான் வந்தேன்.

ஒரு காலத்திலே சிவ.இளங்கோ தலைமையிலே வளர்ந்து சூரியமூர்த்தி தற்போது இந்த சங்கத்திலே பொறுப்பேற்றுள்ள நிலையில் இடைக்காலத்திலே ஏதேதோ நடந்தது. சூரியமூர்த்தியை சில நேரங்களில் கிரகண காலத்தில் சூரியன் எந்த பக்கத்திலே இருக்கிறது என்று தெரியாமல், கண்ணாடியிலே கறுப்பு வண்ணம் பூசி பார்ப்பதைப்போல, பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் இங்கேதான் இருக்கிறார் சூர்யமூர்த்தி என்பதை இன்றைக்கு வள்ளுவர் கோட்டத்திலே நடைபெறுகின்ற நிகழ்ச்சி சுட்டிக்காட்டியிருக்கின்றது.

"நன்றி மறப்பது நன்று அன்று'' என்று அவர் இந்த மாநாட்டை நடத்துகிறார். நான் "நன்று அல்ல அன்றே மறப்பது நன்று'' என்ற வள்ளுவரின் அடுத்த வரியை பயன்படுத்தி இந்த மாநாட்டிலே கலந்து கொண்டிருக்கிறேன். அரசு ஊழியர்கள் என்றால், அரசு அலுவலர் என்றால் சமுதாயத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று பொருள் அல்ல. சமுதாயத்திலே ஒரு அங்கம் தான் அரசு அலுவலாளர்கள்.

அரசு அலுவலர்களுடைய வாக்கு, ஒரு தேர்தலிலே எத்தனை கிடைத்திருக்கிறது என்பதை வைத்து தேர்தல் முடிவையே கணிக்கக்கூடிய பல நிலைமைகள் எல்லாம் உருவாகியிருக்கின்றது. முதலில் தபால் வாக்குகளை எண்ணுவார்கள். அதை எண்ணி முடித்தாலே, தபால் வாக்குகளில் 928-1028-18 என்றெல்லாம் எண்ணிக்கை இருக்குமேயானால், அதுவே மொத்த வாக்குகளுக்கான குறிப்பை உணர்த்தக் கூடிய, ஜனநாயகத்தின் திறவு கோலாகும். இது ஜனநாயகத்தின் ஏற்பாடாகும். அத்தகைய ஏற்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்திருப்பது அரசு அலுவலர்கள்.

நான் வாக்குகளைப்பற்றி பேசுவதாக நீங்கள் எண்ணிக்கொள்ளக்கூடாது. வாக்குகளும் தேவை தான். வாக்குகள் ஒரு ஆட்சியை அகற்றவும் அமைக்கவும் சக்தி வாய்ந்தவை. அந்த வாக்குகள் ஒரு சாதாரண ஏழை குடிமகனிடத்திலும் இருக்கலாம், ஒரு உழவன் இடத்திலும் இருக்கலாம், ஒரு தொழிலாளியிடமும் இருக்கலாம். அறிந்து பார்த்து, பகுத்துப் பார்த்து அளிக்கின்ற கைகளை உடைய அரசு அலுவலர்களிடத்திலும் அந்த வாக்கு இருக்கலாம்.

அப்படிப்பட்ட வாக்குகளுக்கு உரியவர்களாகிய உங்களை இந்த வள்ளுவர் கோட்டத்தில் நான் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் நீங்கள் உணர்ச்சி வயப்பட கூடியவர்கள் அல்ல. நீங்கள் உங்களை ஒருமுறை பார்த்துக் கொண்டு, உங்களை ஆளுகின்ற வர்க்கம் எது என்பதைச் சிந்தித்து அதற்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளக் கூடியவர்கள். அப்படி நீங்கள் மேற்கொண்ட காரணத்தினால் தான் இன்றைக்கு நீங்களும் நானும் இந்த மாபெரும் வள்ளுவர் கோட்டத்திலே அமர்ந்து விவாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய, நிகழ்காலத்தை நடத்தக்கூடிய, நம்முடைய மக்களை, சந்ததியை வாழ வைக்கக்கூடிய ஒரு இயக்கம்-அந்த இயக்கம் கட்சியின் பெயரால், தலைவர்களின் பெயரால் உருவான இயக்கம் அல்ல. உங்களின் உள்ளத்தின் அடிப்படையில், உங்களுடைய உழைப்பின் அடிப்படையிலே ஏற்படுகின்ற இயக்கம்தான்.

என்னிடத்திலே நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்பதற்காகவா? அல்ல. அதிலே ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது அல்லவா? அந்த எண்ணத்தினுடைய அடிப்படை - அந்த எண்ணத்தினுடைய மூலாதாரம் என்ன என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தால், இது நிறைவேற்ற கூடியவன், நிறைவேற்றியவன், மேலும் எதிர்காலத்திலே நிறைவேற்ற வேண்டுமென்று விரும்புகிறவன் யார் என்றால்,-பல கோரிக்கைகளை வைத்து, அந்தக் கோரிக்கைகளுக்காக போராடி-தானே போராடாவிட்டாலும், போராடியவர்களின் பக்கம் நின்று போராடி -களத்திலே நின்று, சிறைப்பட்டு, யார் யார் தங்களையே தியாகம் செய்து இந்த வெற்றியைத் தேடி தந்தார்களோ, அவர்களை நீங்கள் மறந்து விடமாட்டீர்கள். நீங்கள் மறந்துவிடாமல் இருப்பதற்கு அடையாளம் தான் இந்த மாபெரும் மக்கள் திரள்.

நன்றி பாராட்டுகின்ற இந்த தன்மையை நான் மிகுந்த பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறேன். நன்றி பாராட்டுகின்றவர்கள் தமிழ்நாட்டிலே இருக்கிறார்களே என்பதை எண்ணும்போது எனக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனிப்பட்ட முறையில் என்னிடத்திலே நன்றி பாராட்டி இருக்க வேண்டியவர்கள் இல்லை. பலர் எங்கேயோ போய்விட்டார்கள். சிலர் இன்னமும் இருக்கிறார்கள். அந்தச் சிலரும் நன்றி பாராட்டவில்லையே என்கின்ற ஏக்கத்தோடு நான் இருக்கிறேன்.

பல்வேறு முனைகளிலே பாடுபட்டு கொண்டிருக்கின்ற நீங்கள் வாங்குகின்ற ஊதியத்தால் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை குறைத்து விட முடியாது.

நீங்கள் வாங்குகின்ற ஊதியம், நீங்கள் பெறுகின்ற சலுகை தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை மேலும் மேலும் உயர்த்த கூடியதாக அமையுமே அல்லாமல் அது உங்களையும் இந்த மாநில அரசையும் மாநில மக்களின் வாழ்வையும் வீழ்த்திவிடாது. இதை புரிந்து கொண்டிருக்கின்ற காரணத்தால், ஒரு முறை நான் சொன்னேன்-உங்களுடைய முதல் அமைச்சராக அன்றைக்கு இருந்த அம்மையார் அரசின் மொத்த வருவாயில் 97 சதவிகிதம் அரசு அலுவலர்களின் ஊதியத்திற்காக செலவழிக்கப்படுகிறது என்று சொன்னபோதே நான் அப்போதே அதை மறுத்து அறிக்கை விடுத்தேன்.

அதன் பிறகு ஒருமுறை சட்டமன்றத்திலேயே முதல்-அமைச்சர் பொறுப்பிலேயிருந்து அது பற்றி விளக்கம் அளித்தேன். அரசு அலுவலர்களுக்காக தரப்படுகின்ற சம்பளம் என்பது அவர்களுக்காக தனியாக செலவழிக்கப்படுகின்ற ஒன்று அல்ல. அதுவும் திட்டப்பணியிலே சேர்ந்ததுதான்.

முத்தன் ஆனாலும், முனியன் ஆனாலும் அவனுடைய ரத்தத்தை வியர்வையாக பெய்து கட்டுகின்ற பாலங்களிலேதான் இந்த நாட்டின் உயர்வு இருக்கிறது, இந்த நாட்டின், இந்த சமுதாயத்தின் மூச்சு இருக்கிறது. இதை நாங்கள் உணர்ந்த காரணத்தினாலேதான், இத்தகைய செலவுகளை வீண் செலவுகளாகவோ, பொருளாதாரத்தை சீரழிக்கும் செலவுகளாகவோ நாங்கள் கருதுவதில்லை. அப்படி கருதுகிறவர்கள் பொருளாதாரம் தெரியாதவர்கள் என்று சொல்ல மாட்டேன். மன்னிக்க வேண்டும், பொருளாதாரத்தை முறையாக படிக்க வேண்டியவர்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன்.

அரசு அலுவலர்களாக இருந்தாலும் நீங்கள் தொழிலாளர்கள்தான். நான் முதல்-அமைச்சராக இருந்தாலும் நானும் தொழிலாளிதான். நானும் ஒரு அரசு ஊழியன்தான். அமைச்சர்கள் எல்லாம்கூட தொழிலாளர்கள்தான். தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பை உவந்து வழங்குவதைப் போல, நாங்களும் எங்களுடைய உழைப்பை உவந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஊர், ஊர் மக்கள், சமுதாயம் உய்வதற்காக அந்த உயரிய காரியத்தை செய்து கொண்டிருக்கிறோம். எனவே நீங்கள் வேறு, நாங்கள் வேறல்ல. நீங்களும் நாங்களும் ஒன்றே தான்.

தி.மு.க. ஆட்சி தோன்றியவுடன் தமிழக கோட்டையில் அரசு அலுவலர்களுடனான ஒரு கூட்டத்தை முதல்-அமைச்சராக இருந்த அண்ணா நடத்தினார். நாங்கள் எல்லாம் அமைச்சர்கள் வரிசையிலே அமர்ந்திருக்கிறோம். அண்ணா அந்த அரசு அலுவலர்களைப் பார்த்து, நீங்களும், நானும் சேர்ந்து தான் அரசு நடத்துகிறோம், ஆகவே என்னுடைய ஆட்சியிலே நான் என்ன குறை கண்டாலும், அதிலே உங்களுக்கு பங்கு உண்டு. என்ன நிலையை மக்கள் கண்டாலும் அதிலே உங்களுக்கு பங்கு உண்டு. எனவே அரசு அலுவலர்கள் நடத்துவதுதான் இந்த அரசாங்கம் என்பதை உணர வேண்டும். இதிலே வருகின்ற நிறை குறைகளுக்கெல்லாம் நீங்களும் பொறுப்பு, நானும் பொறுப்பு'' என்றார். அண்ணா சொன்ன அந்த பொன்மொழி இன்னமும் என் காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

அதை மறவாத காரணத்தால் உங்களுக்கு இன்னல் வந்த போதெல்லாம் நான் உங்கள் பக்கமே இருந்தேன். இப்போதும் இருக்கின்றேன். எப்போதும் இருப்பேன். இந்த இடத்திலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் - இருப்பேன், அது நிச்சயம். இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் உங்கள் பக்கம் தான் இருப்போம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த சிவ.இளங்கோ என்னிடம் அவ்வளவு அன்பு கொண்டவர். எந்த அளவிற்கு என்னிடத்திலே மரியாதை காட்டக்கூடியவர் என்பதையெல்லாம் எண்ணி பார்க்கிறேன். உங்கள் அத்தனை பேர்களுடைய முகங்களிலும் எனக்கு சிவ.இளங்கோ தான் தெரிகிறார். சூரியமூர்த்தியின் முயற்சி இன்றைக்கு வெற்றி பெற்றிருப்பதைப்போல தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். எந்த நிலைமை வந்தாலும் சூரியமூர்த்தி கவலைப்பட தேவையில்லை, நாங்கள் இருக்கிறோம், வளைய தேவையில்லை, நிமிர்ந்த நிலையிலே இருந்து இந்த இயக்கத்தை கட்டிக்காப்பாற்ற முன் வாருங்கள் என்று சூரியமூர்த்திக்கு தைரியம் கூறுகிறேன் என்றார் கருணாநிதி.

மாநாட்டு நினைவு கல்வெட்டினை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து உரையாற்றினார். அமைச்சர் பொன்முடி, பன்னாட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் நாடுகளின் செயலாளர் வி.லட்சுமி, அகில இந்திய அரசு அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜே.எல்.பான் ஆகியோர் பேசினர். விழா முடிவில் ஒன்றியத்தின் மாநில பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+