அரசு விரைவு பேருந்துகளில் வேக கட்டுப்பாடு நீக்கம்-அமைச்சர் கே.என். நேரு
திருச்சி: அரசு விரைவு பேருந்துகள் தாமதமாக செல்வதாக வந்த புகாரையடுத்து வேகக் கட்டுப்பாடு நீக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்துள்ளார்.
டீசல் சி்க்கனத்துக்காக அரசு விரைவுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாடு அமலாக்கப்பட்டது. 50 கி.மீ. வேகத்துக்கு மேல் பஸ்கள் இயங்காத வகையில் என்ஜின்களில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
இதனால் அவை நத்தை வேகத்தில் ஊர்ந்து வருகின்றன. சென்னையிலிருந்து மதுரைக்கு இந்தப் பேருந்துகள் 14 முதல் 16 மணி நேரம் வரை பயணிக்கின்றன.
இந் நிலையில் திருச்சி டி.வி.எஸ். சுங்கச் சாவடியில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு எடுப்பதற்காக ரூ.30 லட்சத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தங்கும் அறை மற்றும் தானியங்கி முறையில் அதிவேகமாக பேருந்துகளை சுத்தம் செய்யும் கருவிகள் தொடக்க விழா, தொழிலாளர்களுக் கான உணவகம் திறப்பு விழா ஆகியவை நடைபெற்றன.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அறைகளை திறந்து வைத்தும், நவீன வசதிகளை தொடங்கி வைத்தும் பேசினார். அவர் கூறியதாவது:
அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தின் வருவாய் பெருகவே இல்லை. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்ததோ அதே போன்று தான் இப்போதும் உள்ளது.
வருவாயை பெருக்க வேண்டும் என்பதற்காக இந்த போக்குவரத்து கழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று யோசனை கூறியபோது அதை முதல்வர் ஏற்க மறுத்துவிட்டார்.
அரசுப் போக்குவரத்து கழகங்களை பொறுத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளில் 40 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை சீரமைப்பதற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களது ஓய்வூதியமும் முறைப்படுத்தப்படும்.
மேலும், விரைவில் புதிய ஊதிய ஒப்பந்தமும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பேருந்துகளில் விபத்து ஏற்பட்டால் உயிரிழந்தவர்களுக்கு சம்பவ இடத்திற்கே நேரடியாக போய் ரூ 2 லட்சம் நஷ்டஈடு வழங்கும் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் டெக்னிக்கல் அசிஸ்டெண்டுகள் பதவிக்கு ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அரசு விரைவு போக்கு வரத்து கழக பேருந்துகள் மற்ற பேருந்துகளை விட மிகவும் குறைந்த வேகத்தில் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், வேக கட்டுப்பாடு நீக்கப்படும்.
இனி வரும் காலங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications