கேரளாவை கண்டித்து மதிமுக மறியல்: 'நியாயத்தின் கதவுகள் திறக்கட்டும்'-வைகோ

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: நதி நீர்ப் பகிர்வு பிரச்சனைகளில் கேரளாவை கண்டித்து மதிமுக சார்பில் நாளை அந்த மாநிலத்துக்குச் செல்லும் 12 சாலைகளிலும் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

இது குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே காலில் போட்டு மிதித்து விட்டதே!.

அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் நயவஞ்சகத்தைத் தானே மத்திய அரசு செய்கிறது. அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி? போராட்டம் தானே ஒரே வழி, அதுவும், அறப்போராட்டம், வன்முறை துளியும் தலைகாட்டாத போராட்டம். இந்தப் போராட்டத்தை, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நடத்தவில்லை நாம்.

நாடு சுற்றி வந்து, லட்சோபலட்சம் மக்களைச் சந்தித்து, மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சனையை எடுத்து விளக்கி, நாளை நடக்கும் அறப்போரையும், ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.

அறபோருக்கு எதிர்பார்த்தைவிட பலத்த ஆதரவு. தமிழகம் எங்கும் குறிப்பாக, பாதிக்கப்படும் பகுதிகளிலும் வலுவாக ஏற்பட்டிருப்பது, தெம்பைத் தருகிறது.

இந்தப் போராட்டத்தில், நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒழுங்கும், கட்டுப்பாடும். எள் முனை அளவு வன்முறையும் தலைகாட்ட நாம் அனுமதிக்கக் கூடாது. கேரள மக்களிடம் நம்மைத் தவறாகச் சித்தரிக்கவே அது பயன்படும்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில், 2, 17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம், 65 லட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்.

பாம்பாறு பிரச்சனையால், 78,000 ஏக்கர் பாசனத்தை இழக்க நேரும் அவலம். செண்பகவல்லி தடுப்பு அணையால், 30 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்கும் இன்னல். நெய்யாறு இடதுகரைச்சானலில், 9,200 ஏக்கர் பாசனத்தை இழந்து நிற்கும் துயரம்.

இது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் எதிர்காலத்தில் வறண்டு, ஒன்றரைக் கோடி மக்கள் குடி தண்ணீரை இழக்கின்ற விபரீதம். இவற்றையெல்லாம், கவலையோடு கவனத்தில் கொண்டே, அறப்போரை நடத்துகிறோம்.

முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போலவும், லட்சக்கணக்கான கேரள மக்கள் மடிவதைப்போலவும், மாயாஜால கிராபிக்ஸ் காட்சிகளைக் குறுந்தகடுகளாகத் தயாரித்து, கேரள மாநிலம் முழுவதும் ஐந்து லட்சம் சி.டிக்களை வழங்கி, மக்களிடம் பதற்றத்தை பீதியை ஏற்படுத்தி வரும் அச்சுதானந்தன் அரசு, உச்ச நீதிமன்றத்திலும் இதை ஆவணமாக ஆக்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கவும் கேரள அரசு திட்டமிடுகிறது.

இந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும், நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும். 28ம் தேதியோடு போராட்டம் நின்று விடாது. உரிமைகாக்கும் அறப்போர்ப் பயணத்தில் இதுவும் ஒரு மைல்கல் ஆகும். கேரள முற்றுகை- சாலை மறியல் என்று, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்.

அறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, மதிமுக தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடங்களில் கலந்து கொள்வார்கள் என்பது முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+