முத்துசாமி போனாலும் ஈரோடு அதிமுக கோட்டை: செங்கோட்டையன்
ஈரோடு: தமிழ்நாட்டில் கூட்டணி மாறும், மீண்டும் புரட்சித் தலைவி ஆட்சிக்கு வருவார். அப்போது இங்கிருந்து திமுகவுக்கு சென்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்று அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் கூறினார்.
அதிமுக அமைப்புச் செயலாளரும், ஈரோடு-நாமக்கல் மாவட்ட அதிமுக பொறுப்பாளராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் முத்துசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டையடுத்து, அந்த மாவட்டத்தில் நிலைமையை நேரில் அறிந்து வர கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் ஈரோடு விரைந்தார்.
அங்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அவரச ஆலோசனை நடத்தினார். இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், புரட்சித் தலைவி என்ன பொறுப்பை கொடுக்கிறாரோ அதைத்தான் நாம் கவனித்து வருகிறோம். முன்னாள் அமைச்சர் முத்துசாமி தனக்கு மனக்குறை இருப்பதாக தெரிவித்தார். உடனே அம்மா அவர்கள் அவரை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, நேரில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் வரவில்லை.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் தான், அவரை புரட்சித் தலைவி நீக்கியுள்ளார். நமக்கு ஒரே எதிரி கருணாநிதி தான். நம் ரத்தத்தில் ஓடுவது இரட்டை இலை சின்னம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
தமிழ்நாட்டில் கூட்டணி மாறும். மீண்டும் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வருவார். அப்போது இங்கிருந்து திமுகவுக்கு சென்றவர்கள் வருத்தப்படுவார்கள். அந்த காலம் வெகுதூரத்தில் இல்லை. ஈரோடு எப்போதும் அதிமுக கோட்டை என்றார்.
ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்-முத்துசாமி:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய முத்துசாமி,
1972ம் ஆண்டில் எம்ஜிஆர், அதிமுகவைத் துவக்கியதிலிருந்து கட்சியில் உள்ளவர்கள்தான், இப்போது கட்சியை விட்டு நீக்கப்பபட்டுள்ளார்கள்.
எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்த சூழலில், கட்சியை இணைத்து, மீண்டும் இரட்டை இலை சின்னத்தைப் பெறும் முயற்சிகளில் நாங்களும் துணையாக இருந்தோம்.
ஆனாலும், ஜானகி அணியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி தொடர்ந்து எங்களைப் புறக்கணித்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தோம்.
2001ம் ஆண்டுக்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைப் பற்றிக் கூட வருந்தாமல், அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாகப் உழைத்தேன்.
சுமார் 15 ஆண்டுகாலம் ஓரம் கட்டப்பட்டபோதிலும் வேறு கட்சிக்குச் செல்லாமல், கட்சி வளர்ச்சிக்காகப் போராடினேன்.
ஆனால், ஜெயலலிதா ஈரோட்டுக்கு வந்தபோதும், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது, மிகுந்த மன வேதனையை அளித்தது.
இனிமேல் அதிமுகவில் இருப்பது மரியாதையாக இருக்காது என்பதால், அந்தக் கட்சியிலிருந்து விலக முடிவெடுத்தேன்.
தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் என்னைத் தொடர்பு கொண்டு, தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அனைவரிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர், வேறு கட்சிக்குச் செல்வதா அல்லது தனிக்கட்சி அமைப்பதா என்று முடிவு செய்வேன்.
எனினும் போட்டி அதிமுகவை உருவாக்கும் எண்ணம் ஏதும் என்னிடம் இல்லை. எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வேலையில் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்.
எனது தந்தை இறந்தபோது, எனது சின்ன கிராமத்திற்கு நேரில் வந்த எம்ஜிஆர், சடலத்தை தோள் கொடுத்துத் தூக்கினார். ஆனால் எனது தாயார் இறந்தபோது, ஜெயலலிதா அனுதாபச் செய்தி கூட அனுப்பவில்லை. இது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம்.
பலமுறை கட்சி வளர்ச்சிக்காக நான் கூறிய யோசனைகளை உதாசீனப்படுத்திய ஜெயலலிதா, என்மீது தேவையற்ற குற்றம் சுமத்தவும் தயங்கவில்லை.
அதிமுக தொண்டர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களது உணர்வுகளை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்சியிலிருந்து தொடர்ந்து தொண்டர்கள் வெளியேறுவதை தடுக்க முடியாது.
தற்போது கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு, மக்கள் எண்ணங்களை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதால்தான், திமுகவால் தொடர்ந்து ஜெயிக்க முடிகிறது. பல்வேறு திட்டங்களாலும் திமுகவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது என்றார் முத்துசாமி.












Click it and Unblock the Notifications