சிக்கலில் டக்ளஸ்!-இந்தியா மன்னித்துவிட்டது என்கிறார்!!

சென்னையில், கொலை, கொள்ளை மற்றும் குழந்தைக் கடத்தல் தொடர்பான வழக்கில் தொடர்புடைய டக்ளஸ் கடந்த 1986ம் ஆண்டு தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் தற்போது அவர் இந்திய அரசின் விருந்தினராக, ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் கை கொடுத்து வரவேற்று உபசரித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக இன்று தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில், இந்று டெல்லியில் செய்தியாளர்களிடம் டக்ளஸ் பேசுகையில், இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது. எனக்கும் அது பொருந்தும்.
என்னைத் தலைமறைவு குற்றவாளியாக சென்னை கோர்ட் அறிவித்திருப்பது குறித்து எனக்குத் தெரியாது. அப்படியும், ஏதாவது சட்டப்படியான நடவடிக்கைகள் இருந்தால் அதை சந்திக்க நான் தயார்.
என்னைக் கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதில் சதி உள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது.
நான் இந்திய அரசின் கண்காணிப்புப் பட்டியலில் இல்லை. இங்கு நான் சட்டவிரோதமாகவும் வரவில்லை. சட்டப்படிதான் வந்துள்ளேன் என்றார் டக்ளஸ்.
முன்னதாக டக்ளஸை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக் கழக செயலாளரான வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்,
இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல்ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.
1986ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
வெளியே வந்த பிறகு, 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
1989ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.
இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந் நிலையில் டக்ளஸ் தேடப்படும் குற்றவாளி என்று சென்னை போலீஸ் அறிவித்துள்ளது. இது குறித்து ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில்,
டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி. அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து டெல்லி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கைகளை டெல்லி காவல்துறைதான் எடுக்க வேண்டும்.
டெல்லி காவல்துறையினர் கேட்டுக்கொண்டால், தமிழகத்தில் இருந்து சிறப்பு காவல்படையை அனுப்பி உதவி செய்யப்படும். ஆனால் டெல்லி காவல்துறையினர்தான் கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications