புத்தகம் மட்டும் ஒரே மாதிரியாக இருந்தால் சமச்சீர் கல்வியாகி விடுமா? விஜயகாந்த் 'நறுக்'!

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கோ. ஆதனூர் என்னும் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி வகுப்புகள் மரத்தடியின் கீழ் நடந்து வருகிறது. இந்த பள்ளியில் 642 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பெயருக்குத்தான் உயர்நிலைப்பள்ளி, ஆளால் இங்கு போதிய வகுப்பறைகள், குடிநீர் வசதி, சுகாதாரம், ஒழுங்கான கட்டிடங்கள் போன்ற இதர வசதிகள் இருக்கின்றதா என்பதை அரசு கவனிக்க தவறிவிட்டது.
மேலும், 177 ஆரம்பப்பள்ளிகளில் 3 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இதனால் மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நெருக்கிக் கொண்டு அமர வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மரத்தடியில் பாடம் நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
ஆய்வுக்கூடம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடிய உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கும் மரத்தடியில் தான் பாடம். மழைக் காலம் வந்தால் இவர்களுக்கு நிரந்தர விடுப்பு தான்.
இது குறித்து 13.02.2009 அன்று மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நான் எழுதிய கடிதத்தில் கோ.ஆதனூர் மட்டுமல்லாமல் இதே போல் இன்னும் 13 மேல் நிலை மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளேன். மீண்டும் 13.12.2009 அன்று நினைவூட்டல் கடிதமும் எழுதியுள்ளேன்.
அனைவருக்கும் கல்வி என்கிறது இந்திய அரசு. தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை திறம்பட நடத்தி வருவதாக பெருமை அடித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.
ஆனால் உண்மையில் தமிழ் நாட்டு கிராமப்புறங்களில் போதுமான பள்ளிக்கூடங்கள் இல்லை. போதுமான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இல்லை. இது மட்டுமின்றி குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.
பள்ளிகளில் ஆய்வுக்கூடங்கள், விளையாட்டுத்திடல்கள், சுற்றுச் சுவர்கள் இல்லை. மழைக்காலங்களில் பள்ளிகளுக்குள் குடை பிடிக்கும் நிலை. இதில் எல்லாம் தி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை.
சமச்சீர் கல்வி திட்டம் என்றால் என்ன? பெருநகரங்களில் வாழும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளுக்கு அளிக்கப்படும் கல்வியைப்போன்று குக்கிராமத்தில் உள்ள ஏழைப்பிள்ளைகளுக்கும் அளிப்பதே சமச்சீர் கல்வியாகும்.
அனைத்து பிள்ளைகளுக்கும் ஒரே பாடப்புத்தகத்தை அச்சடித்துத் தந்து விட்டு இதுதான் சமச்சீர் கல்வி திட்டம் என்று அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.
அந்த பாடப்புத்தகங்களை வசதி படைத்த வீட்டுப்பிள்ளைகள் எளிதாக படிக்க முடியும். ஆனால் ஏழைகள் வீட்டுக் பிள்ளைகளுக்கு அதை கற்றுத்தர ஆசிரியர்கள் இல்லை. என்னுடைய தொகுதி விருத்தாசலம் என்பதால் இவ்வாறு புறக்கணிக்கப்படுகிறதா?
இதன் பிறகாவது அரசு விருத்தாசலத்தில் மட்டுமல்லாமல் தமிழ்கம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து தகுந்த வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications