முன்கூட்டியே சட்டமன்ற தேர்தலை நடத்த தயார்-ஆணையம்
சென்னை: தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடத்த வேண்டுமானாலும் நடத்த தேர்தல் ஆணையம் தயார் என்று கூறியுள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா.
தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நவீன்சாவ்லா தலைமையில் நடந்தது. இதில் தேர்தல் ஆணையர்கள் சம்பத், குரேஷி, தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் மாலையில் நவீன் சாவ்லா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பொதுவாகவே, பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஓராண்டுக்கு முன்னதாகவே நாங்கள் தொடங்குவது வழக்கம். சென்னை விமான நிலையத்துக்கு நான் தமிழகத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா? என்று என்னிடம் நிருபர்கள் கேட்டனர். இந்த கட்டத்தில், தமிழகத்துக்கு மட்டுமல்லாமல், வேறு எந்த மாநிலத்துக்கும் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது பற்றி சொல்வது கடினம்.
தமிழகத்துக்கு முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் வந்தால் எந்த நேரத்திலும் அதனை நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் சட்டமன்ற தேர்தலை நடத்தும்படி கோரி, தமிழக அரசு இதுவரை கடிதம் எதுவும் அனுப்பவில்லை.
வாக்காளர் பட்டியல் சரியாக இருக்கிறதா என்பதையும், மற்ற தேர்தல் தொடர்பான பணிகளையும் நாங்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது. முறையான, சரியான வாக்காளர் பட்டியல் இல்லாதபட்சத்தில் தேர்தலை நியாயமாக நடத்த முடியாது.
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ளன. தமிழகத்தில் 99 சதவீத அளவுக்கு புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. நம் நாட்டில் கேரளத்துக்கு அடுத்தபடியாக, கிட்டத்தட்ட 100 சதவீதம் புகைப்பட வாக்காளர் பட்டியல் தயாரித்துள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
வெளிநாட்டுக்கு போனால் கூட நாங்கள், தமிழகத்தையும், கேரளாவையும் பற்றி பெருமையாக குறிப்பிடுகிறோம். இருந்தாலும், வாக்காளர் பட்டியலை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், உயிரிழந்தவர்களின் பெயரை நீக்க வேண்டும், 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும்.
முகவரி மாறியவர்களின் பெயர்களை சரியான முறையில் வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதுதான் நாடு முழுவதுமே பிரச்சினையாக உள்ளது. அவர்கள் எங்கு இருந்தார்களோ அங்கு பெயரை நீக்கி, புதிய இடத்தில், அவர்கள் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை உன்னிப்பாக சரிபார்க்க வேண்டும். எங்களுக்குள்ள பிரச்சினைகளில் 50 சதவீத பிரச்சினை, ஒழுங்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதே ஆகும்.
பல இடங்களில், வாக்காளர்கள் பெயர் விடுபட்டிருக்கும் பிரச்சினை உள்ளது. அதை சரிப்படுத்த வேண்டியது முக்கியமான பணியாகும். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் ஒரு சிறப்புத் திட்டத்தினை, எங்களது அதிகாரி டைரக்டர் ஜெனரல் அக்ஷய் ராவத் செயல்படுத்தி வருகிறார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு, வாக்குப்பதிவின்போது பி.எல்.ஓ. எனப்படும் வாக்குச்சாவடி அதிகாரியை (பூத் லெவல் ஆபீசர்) நியமிக்கும் புதிய திட்டத்தினை செயல்படுத்தத் தொடங்கினோம். அது நல்ல பயனை தந்து வருகிறது. தற்போது, 1,500 வாக்காளர்களுக்கு ஒரு பி.எல்.ஓ என நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் 3 வாக்குச்சாவடிகளுக்குக் கூட ஒரு பி.எல்.ஓ பொறுப்பாளராக இருக்கும் நிலை உள்ளது. இதனை மாற்றி, ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு பி.எல்.ஓ'வை நியமிக்க ஏற்பாடு செய்யும்படி தமிழக உள்துறைச் செயலாளரிடம் சற்று முன்பு தெரிவித்தேன். அதை தலைமைச் செயலாளரிடமும் தெரிவிக்குமாறு சொல்லியிருக்கிறேன். இதற்கு ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வேறு யாரை நியமித்தாலும், அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணிபுரிய செய்யலாம்.
தேர்தல் தொடர்பான எத்தனை வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன? என்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும், போலீஸ் அதிகாரிகளிடமும் கேட்டறிந்தோம். அதன்பிறகு, தத்தமது மாவட்டத்தில் உள்ள நிலைமைகளை பற்றி கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் கருத்துக்களை தெரிவித்தார்கள். மொத்தத்தில் தமிழகத்தில் நிலைமை திருப்திகரமாக உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளிடம், இரண்டு புதிய கருத்துக்களை பற்றி நாங்கள் வலியுறுத்தினோம்.
முதலில், பணம் கொடுத்து வெளியிடப்படும் (தொலைக்காட்சி, பத்திரிகைகளில்) செய்திகள் பற்றி சொன்னோம். இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். அதை அவர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதைப்பற்றி நான் மேலும் எதுவும் சொல்லமாட்டேன். எங்களது இணையதளத்தில் இது குறித்து தகவல்கள் உள்ளன.
இரண்டாவது விஷயம். தேர்தலின்போது வேட்பாளர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை விட அதிகமாக செலவு செய்வது. இதைப் பற்றி, ஜம்முவில் அண்மையில் நடந்த தலைமை தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் நாங்கள் விவாதித்தோம். அதில் தேர்தல் செலவுகளை குறிப்பிடப்பட்ட வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் அப்போது தீர்மானித்தோம். இதற்காக புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் செலவுகளை இனி நாங்கள் தீவிரமாக கண்காணிக்கப் போகிறோம். தேர்தல் செலவுகளை அதிகரிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. பாராளுமன்றத்திடம்தான் உள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள அளவை விட அதிகம் செலவு செய்வதைத் தடுப்பதுதான் எங்களது பணி.
கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அந்த மாநில கவர்னர் அளித்த அறிக்கை எங்களுக்கு கிடைத்தது. அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது தொடர்பாக ரெட்டி சகோதரர்களுக்கும் நாங்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் இந்த மாதம் 15-ந் தேதிக்குள் அதற்கு பதில் அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில், சட்டப்பிரகாரம்தான் நடவடிக்கை எடுப்போம். சொந்தமாக முடிவு எடுக்க முடியாது.
சில காலத்துக்கு முன்பாகவே, நாங்கள் ஒரு உத்தரவினை பிறப்பித்திருக்கிறோம். அது எங்கள் இணையதளத்திலும் உள்ளது. அதாவது, தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, அந்தந்த மாநில அரசுகள் ஒரு அரசாணை மூலம் வாபஸ் பெறுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தின் முடிவு கிடைக்கும் வரை நடைபெறவேண்டும். அந்த வழக்குகளை மாநில அரசுகள் வாபஸ் பெறக்கூடாது. பெல்லாரியில் இதுபோல் நடந்தது. ஆனால், அந்த வழக்கினை மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டது.
தமிழகத்தில் மேலவை தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு ஆசிரியர், ஒரு பட்டதாரி கூட விடுபடக்கூடாது என்ற வகையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். சட்டப்படி, நவம்பர் 1-ந் தேதிக்கு முன்பு தமிழக மேல்சபைக்கு தேர்தல் நடத்தப்படாது என்றார்.
வாக்காளர்களுக்குப் பணம் தரப்படும் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையில்,
தமிழகத்திலும், வேறு சில மாநிலங்களிலும், சமீபத்தில் இந்த பிரச்சினை இருந்தது. நாங்கள் இப்பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பத்திரிகைகள் எங்களது நண்பர்கள். தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை அவர்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.
நாங்கள் எல்லா இடங்களையும் கண்காணிக்க முடியாது. ஆனால் பத்திரிகைகள் எல்லா இடங்களையும் பார்க்கலாம். அவர்கள் அதுபோன்ற செய்திகளை ஆதாரத்துடன் வெளியிட்டால், அதன் அடிப்படையிலேயே நாங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.
தேர்தலின்போது பணம் தரப்படுவதைத் தடுக்க முன்னிலும் கவனமாக செயல்படுவோம். தமிழகத்தில் மட்டுமல்ல. நாடு முழுவதுமே நாங்கள் தீவிரமாக கண்காணிக்க இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications