ஓ.பன்னீர்செல்வம் காலில் விழுந்து கதறி அழுது மயங்கி விழுந்த பெண் எம்.எல்.ஏ
கோவை: கோவை மாவட்ட அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் பெண் எம்எல்ஏ பிரேமா, கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுந்து அழுதார்.
அதிமுக சார்பில் வரும் ஜூலை 13ம் தேதி, கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில், மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் திரட்டுவது, ஜெயலலிதாவை வரவேற்பது ஆகியவை குறித்து அதிமுக ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டம் கோவை அன்னூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாநகர அதிமுக செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார்.
அதில் கலந்து கொண்ட தொண்டர்கள், அவிநாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பிரேமா மீது சரமாரியாக புகார் கூறினர்.
ஒன்றிய மாணவரணி செயலாளர் காளிமுத்து பேசுகையில், பிரேமா எம்.எல்.ஏ. கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. எல்லா வேலைகளுக்கும் கமிஷன் பெறுகிறார். அதிமுக நிர்வாகிகளிடமே வற்புறுத்தி கமிஷன் வாங்குகிறார் என்று குற்றம் சாட்டினார்.
இதேபோல அடுத்தடுத்துப் பேசிய நிர்வாகிகளும் சரமாரியாக புகார் கூறவே, இதனால் கோபமடைந்த பிரேமா, கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறினார்.
அப்போது கட்சியின் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன், மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அங்கு வந்தனர்.
இதையடுத்து அவர்களை நோக்கி ஓடிய பிரேமா, என் மீது வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகளை கட்சியினர் கூறுகின்றனர் என்று அழுது புலம்பினார். ஒரு கட்டத்தில் அவர் பன்னீர்செல்வம் காலில் விழுந்து அழுதபடியே மயங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓ.பி மற்றும் நிர்வாகிகள், பிரேமா முகத்தில் தண்ணீரைத் தெளித்து மயக்கம் தெளிய வைத்து ஆறுதல் கூறினர். அதன் பின் பிரேமா கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'பணமில்லை..கூட்டம் கூட்ட பெரும் கஷ்டம்':
இதற்கிடையே கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஒன்றியச் செயலாளரும் 2 வேன்களில் 100 பேரை அழைத்துவர வேண்டும் என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் கூறியுள்ளனர்.
அதிமுக நெல்லை மாவட்டச் செயலாளர், தனது மாவட்ட ஒன்றியச் செயலாளர்களிடம் இதைத் தெரிவித்தபோது, சில ஒன்றியச் செயலாளர்கள் எங்களிடம் இதற்குப் பணமில்லை, மாவட்டச் செயலாளர்கள் தான் இதற்கான நிதியைத் தர வேண்டும். அதைவிட்டுவிட்டு எங்களை கூட்டத்தை திரட்டி வரச் சொல்வது சரியல்ல என்று புலம்பி வருகிறார்களாம்.
'அண்ணன்-தம்பி சண்டை இருக்கத்தான் செய்யும்....':
இதற்கிடையே திருச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
அதிமுக ஆதரவு வாக்காளர்களை, திமுகவினர் சூழ்ச்சி செய்து பட்டியலில் இருந்து நீக்கிவிடாமல் இருக்க அதிமுகவினர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவர் பேசுகையில், உலக அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம் இருக்கிறதென்றால் அது இப்போதைய திமுக ஆட்சிதான்.
தீய சக்திகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அம்மா புரட்சித் தலைவி தலைமையில் ஆட்சியமைப்பது மட்டும்தான் அதிமுக தொண்டனின் ஒரே நோக்கம். எத்தனை கருணாநிதி வந்தாலும், எத்தனை அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டாலும் அதிமுக என்ற எக்கு கோடையைத் தகர்க்க முடியாது.
செம்மொழி மாநாடு என்ற பெயரில் 5 நாள்களில் ரூ. 500 கோடியை செலவழித்திருக்கின்றனர். அது ஒரு குடும்ப மாநாடாகவே நடந்து முடிந்திருக்கிறது.
எத்தனை டிவிக்கள் இருந்தாலும், லட்சக்கணக்கான நம் தொண்டர்களின் இந்த பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாது. அதிமுக என்ற பெரிய குடும்பத்தில் அண்ணன், தம்பி சண்டை இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, விருப்பு வெறுப்பின்றி பணியாற்ற முன் வாருங்கள் என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications