அண்ணா சாலையில் பறக்கும் சாலை.. ஆய்வுப் பணிகள் துவக்கம்!

இருக்கிற சாலைகளின் ஓரங்களை பல முறை அகலப்படுத்திப் பார்த்தும் பலன் பெரிதாக ஒன்றுமில்லை. (சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டதுதான் மிச்சம்!)
குறிப்பாக அண்ணா சாலையில் பீக் அவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களை செலுத்துவது நரக வேதனையைத் தரும் சமாச்சாரம்.
இதற்கு என்னதான் தீர்வு என்று கடந்த 20 ஆண்டு காலமாக அரசுகள் பல்வேறு யோசனைகளை பரிசீலித்து வந்தன. அதில் ஒன்று 'சிங்கிள் லைன் கேபிள் கார்'. இதைக் கிட்டத்தட்ட செயல்படுத்தும் மனநிலையில் இருந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அதில் பாதுகாப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பிறகு பறக்கும் ரயில் திட்டம் பரிசீலிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதில் பல முக்கிய கட்டடங்களை இழக்க வேண்டிய சூழல் இருந்தது. எனவே கட்டடங்களுக்கு பங்கம் வராமல், அண்ணா சாலையின் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. (இப்போது கோயம்பேடு - பரங்கி மலை வரை அமைக்கப்படும் ரயில் பாதை போல). 2011-ல் சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஆரம்பமாகின்றன.
ஆனால் இதுமட்டுமே, அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்பதால், அரசிடம் முன்வைக்கப்பட்டுதுதான் 'பறக்கும் சாலைத் திட்டம்'.
இந்தத் திட்டப்படி, சென்னை அண்ணா சிலையிலிருந்து (தலைமைச் செயலகம்) ஆயிரம் விளக்கு வரை பறக்கும் சாலை அமைக்கப்படும். அதற்கடுத்து எல்டாம்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சைதாப்பேட்டை வரை அடுத்த பகுதி பறக்கும் சாலை அமையும்.
ஆயிரம் விளக்கு மற்றும் எல்டாம்ஸ் சாலைக்கு இடையில் அண்ணா மேம்பாலம் வருகிறது. நகரின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் பறக்கும் சாலையிலிருந்து இறங்கி இந்தப் பகுதியில் மாறிக் கொள்ள வசதியாக இந்த இரண்டு கட்ட பறக்கும் சாலைத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதற்கான மாதிரி வரைவுகள் முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலினால் கடந்த பிப்ரவரியிலேயே பார்வையிடப்பட்டு விட்டன. முதல்வருக்கு இந்தத் திட்டத்தில் பூரண திருப்தி என்பதால் அப்போதே சம்மதம் தெரிவித்துவிட்டார். இன்னும் ஓரிரு தினங்களில் இந்தத் திட்டங்களுக்கு ஆய்வுப் பணிகள் துவங்கவுள்ளன.
அண்ணா சாலையின் மேலும் கீழும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லலாம். அதே நேரம் சாலையின் மையப் பகுதியில் மெட்ரோ ரயிலும் செல்லும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும்.
மெட்ரோ ரயில் திட்டத்தில் அண்ணா சாலையில் அமையவிருக்கும் 8 ரயில் நிலையங்கள் தவிர்த்து பிற இடங்களில் பறக்கும் சாலைக்கான முதல் கட்ட ஆய்வுப் பணிகள் துவங்கவிருக்கின்றன.
புதிதாக அமையவிருக்கும் பறக்கும் சாலை கட்டணம் செலுத்தும் சாலையாக இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இது சென்னைவாசிகளுக்கு மேலும் மகிழ்ச்சி தரும் செய்தி.
இந்தத் திட்டத்துக்கான செலவு, அதற்கான நிதி ஆதாரங்கள், ஒப்பந்ததாரர்கள் பற்றிய விவரங்களை விரைவில் தமிழக முதல்வரே வெளியிடவிருக்கிறார்.












Click it and Unblock the Notifications