''ஜெயலலிதாவின் காடாறு மாதம், நாடாறு மாதம்'': கருணாநிதி காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க அரசு மைனாரிட்டி ஆட்சி என்றால், ஜெயலலிதாவுக்கு தைரியம் இருந்திருக்குமேயானால் - கழக அரசு மீது ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து தனது மெஜாரிட்டியை நிரூபித்திருக்க வேண்டியதுதானே? அதற்கு வக்கற்ற ஜெயலலிதாவுக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று சொல்வதற்கு எந்த அருகதையாவது உண்டா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடித பாணி அறிக்கை:

2006-ம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத் தேர்தல் முடிந்த பிறகு - கடந்த 4 ஆண்டு காலமாக கொடநாடு எஸ்டேட்டிலும் - சிறுதாவூர் மாளிகையிலும் காடாறு மாதம், நாடாறு மாதம் என்பதைப் போல ஓய்வெடுத்துக் கொண்டு - அன்றாடம் யாரோ எழுதும் அறிக்கைகளிலே கையெழுத்திட்டுக் கொடுப்பதையே தன்னுடைய அரசியல் பணியாகக் கொண்டு காலம் தள்ளிய எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா - அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போகிறது என்றதும் - நாடகத்தின் துவக்கத்திலே "அகோ வாரும் பிள்ளாய்'' என்பதைப் போல பேச்சு என்ற பெயரால் ஒரு நீண்ட கட்டுரையை எழுதிக் கொடுக்கச் சொல்லி - கோவையிலே கண்டனப் பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டி - அந்தக் கூட்டத் திலே ஒரு மணி நேரத்திற்கு மேலாக அதனை மூச்சு விடாமல் படித்திருக்கிறார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை அனைத்துலக நாடுகளின் நல்லறிவாளர்களையும், ஆன்றோர், சான்றோர், அறிஞர்களையும் கொண்டு கோவையிலே நடத்தி - உலகத் தமிழர்களையெல்லாம் அங்கே ஒன்று கூட்டி - லட்சக்கணக்கான மக்கள் 5 நாட்கள் தங்கி முக்கியமான தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுத்த காரணத்தால் - கோவை மாநகரையே தங்கள் கண்டனப் பொதுக்கூட்டத்திற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்து - தமிழகம் எங்கும் இருந்து கட்சிக்காரர்களை எல்லாம் அங்கே அழைத்து வந்து ஜெயலலிதா முழங்கியிருக்கிறார்.

அது அவர்களுடைய கட்சி வளர்ப்புப் பணி என்றபோதிலும் - அங்கே அவர் எழுப்பிய பல ஆதாரமற்ற உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் முறையான விளக்கங்களை அளிக்க வேண்டியது அரசுப் பொறுப்பிலே உள்ளவர்களின் கடமை என்ற உணர்வோடு - ஜெயலலிதா எழுப்பிய குற்றச் சாட்டுகள் எல்லாம் எப்படிப்பட்டவை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவும் - அதே நேரத்தில் கடந்த நாலரை ஆண்டுகளில் ஆட்சிப் பொறுப்பிலே உள்ள கழக அரசு செய்த சாதனைகளின் தொகுப்பையும் விளக்கிட விரும்புகின்றேன்.

முதலாவதாக ஜெயலலிதா கடந்த 4 ஆண்டு காலமாக வெளியிட்ட அறிக்கைகளில் எல்லாம் தி.மு. கழக அரசை "மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி'' என்றே வர்ணித்து வந்திருக்கிறார். கோவை பேச்சிலும் அதனையே இரண்டு மூன்று இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தி.மு.க அரசு மைனாரிட்டி ஆட்சி என்றால், ஜெயலலிதாவுக்கு தைரியம் இருந்திருக்குமேயானால் - கழக அரசு மீது ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து தனது மெஜாரிட்டியை நிரூபித்திருக்க வேண்டியதுதானே? அதற்கு வக்கற்ற ஜெயலலிதாவுக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசு என்று சொல்வதற்கு எந்த அருகதையாவது உண்டா என்பதை தமிழ்நாட்டு மக்களே நீங்களே புரிந்து கொள்ளுங்கள்!.

அடுத்து ஜெயலலிதா தனது பேச்சில், தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை, தமிழ் மொழி வளர்ச்சி அடையவில்லை, தமிழர்களும் வளர்ச்சி அடையவில்லை என்கிறார். இது உண்மையா?. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் எந்த அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டது, தற்போது இந்த ஆண்டு அந்தந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பதை ஒப்பிட்டுக் காட்டினாலே தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறதா என்பதை சுலபத்தில் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக வேளாண்மைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 801 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 1836 கோடி ரூபாய்.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 2828 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 5665 கோடி ரூபாய். பள்ளிக் கல்வித் துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 4110 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 9148 கோடி ரூபாய்.

சமூக நலத் துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 654 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 2167 கோடி ரூபாய். உயர் கல்வித் துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 745 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 1463 கோடி ரூபாய். மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 1487 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 3391 கோடி ரூபாய்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 487 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 876 கோடி ரூபாய். நெடுஞ்சாலைத் துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 2381 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 4383 கோடி ரூபாய்.

காவல் துறைக்கு 2005-2006-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீடு 1346 கோடி ரூபாய். 2009-2010-ல் கழக ஆட்சியில் இந்தத் துறைக்கு செய்யப்பட்ட ஒதுக்கீடு 2855 கோடி ரூபாய். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்படுவது முறைதான் என்ற போதிலும் - கழக ஆட்சியில் 4 ஆண்டு காலத்தில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதைப் பார்த்தாலே தமிழ்நாடு எத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதை விவரம் புரிந்தவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ளலாம்.

2006-ம் ஆண்டிற்குப் பிறகு கோவை, திருச்சி, நெல்லை, மதுரை ஆகிய இடங்களில் 4 புதிய அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்கள் - ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், பெண்ணாகரம், திருப்பத்தூர் (வேலூர்), வேதாரண்யம் ஆகிய 14 இடங்களில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் - விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் - திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் - பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப் பாடமென சட்டம் - தமிழ்மொழியை செம்மொழியாக ஆக்கியது - சென்னையிலே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்வு - அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் போன்ற திட்டங்கள் எல்லாம் தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழர்களும் வளராததற்கான அடையாளங்களா என்பதை ஆத்திரக்கார ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.

ஜெயலலிதா தனது பேச்சில் விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது; ஏன் குறைந்துள்ளது? பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை, காவேரி தண்ணீரைப் பெற முயற்சிக்கவில்லை, அதற்குக் காரணம் கருணாநிதியின் குடும்பத்தினர் அங்கே தொழில் நடத்திக் கொண்டிருப்பதுதான், கர்நாடக அரசை வற்புறுத்தினால் கருணாநிதியின் குடும்பத்தினரின் தொழில் பாதிக்கும் என்பதால் தண்ணீர் கேட்கவில்லை என்றெல்லாம் வியாக்கியானம் செய்திருக்கிறார். நான் கேட்கிறேன், என்னுடைய குடும்பத்தினர் கர்நாடகாவிலே தொழில் நடத்துவதற்கும், கர்நாடக அரசிடம் தண்ணீர் கேட்பதற்கும் என்ன தொடர்பு என்று ஜெயலலிதா கூறுகிறார்?.

உண்மையில், விவசாயப் பொருள் உற்பத்தி ஜெயலலிதா ஆட்சியில்தான் குறைந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றபிறகு ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. பொதுமக்கள் உண்மை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விவசாயப் பொருள்கள் உற்பத்தி தொடர்பான சில விவரங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

2000-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மொத்த உணவு உற்பத்தி 86 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன்; ஆனால் 2001-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபின் மொத்த உணவு உற்பத்தி 2001-2002-ல் 76 லட்சத்து 89 ஆயிரம் மெட்ரிக் டன்; 2002-2003-ல் அ.தி.மு.க. ஆட்சியில் மொத்த உணவு உற்பத்தி 44 லட்சத்து 61 ஆயிரம் மெட்ரிக் டன்; 2003-2004-ல் அ.தி.மு.க. ஆட்சியில் மொத்த உணவு உற்பத்தி 43 லட்சத்து 12 ஆயிரம் மெட்ரிக் டன்; 2004-2005-ல் அ.தி.மு.க. ஆட்சியில் மொத்த உணவு உற்பத்தி 61 லட்சத்து 46 ஆயிரம் மெட்ரிக் டன்; 2005-2006-ல் அ.தி.மு.க. ஆட்சியில் மொத்த உணவு உற்பத்தி 61 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன்; இவ்வாறு அ.தி.மு.க. ஆட்சி செய்த 5 ஆண்டு காலங்களிலும் உணவு உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்தது.

இந்த உணவு உற்பத்தி ஜெயலலிதா ஆட்சியிலே குறைந்ததற்கான காரணம்; அவர் அண்டை மாநிலங்களில் இருந்து குறிப்பாக காவேரியில் இருந்து ஒழுங்காக நீரைப் பெற்றுத்தராததுதான் என்றும், அவர் பூர்வீகமாக கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அந்த அரசிடம் அப்போது காவேரி தண்ணீருக்காக வலியுறுத்தவில்லை என்றும், அதனால்தான் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி குறைந்தது என்றும் ஜெயலலிதா பாணியிலேயே அவர் சொன்னதை வைத்தே தற்போது யாராவது குற்றஞ்சாட்டலாம் அல்லவா?.

ஜெயலலிதா அற்பத்தனமாக எதற்கெடுத்தாலும் என்னுடைய குடும்பம், என்னுடைய உறவினர்கள் என்றெல்லாம் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். என்ன செய்வது? எனக்கென்று ஒரு குடும்பம் இருந்து தொலைந்துவிட்டது. அந்தக் குடும்பத்திலே உள்ள சிலர் அரசியலிலே இருக்கிறார்கள், சிலர் தொழிலிலே ஈடுபட்டுள்ளார்கள். அரசியலிலே இருந்தாலும் தவறு, தொழிலிலே ஈடுபட்டாலும் தவறு என்றால் அந்தக் குடும்பத்தினரை என்ன தான் செய்வது?

ஜெயலலிதாவைப் பொறுத்த வரை அவருக்குச் சொந்தக் குடும்பம் என்று இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு குடும்பத்தை தன் குடும்பமாக ஆக்கிக் கொண்டு அந்தக் குடும்பத்தினரை வளர்ப்பதிலே அக்கறை காட்டிடவில்லையா?.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி கொடுக்கவில்லையா? அந்தக் கட்சியின் முன்னணித் தலைவராக ஆக்கிடவில்லையா? அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வளர்ப்பு மகன் என்று கூறி - அவரது மணவிழாவை மாநாடுபோல நடத்தவில்லையா?

2006-ல் மீண்டும் தி.மு.க. அரசு அமைந்தபிறகு இந்த அரசு வழங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி, வட்டி இல்லாத பயிர்க்கடன், நெல், கரும்பு ஆகிய விளைபொருள்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடுதல் விலை வழங்கியது, விவசாயிகளுக்கான பண்ணைசாரா கடன்களுக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது போன்ற பல்வேறு சலுகைகள் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு உணவு உற்பத்தி அதிகரித்து வந்துள்ளது என்பதனை பின்வரும் விவரங்கள் தெளிவுபடுத்தும்.

2006-2007-ல் உணவு உற்பத்தி 82 லட்சத்து 64 ஆயிரம் மெட்ரிக் டன்; 2007-2008-ல் உணவு உற்பத்தி 84 லட்சத்து 46 ஆயிரம் மெட்ரிக் டன்; 2008-2009-ல் உணவு உற்பத்தி 91 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன்; 2009-2010-ல் உணவு உற்பத்தி 95 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன்; எனப் படிப்படியாக உயர்ந்து மகத்தான சாதனை தான் படைத்துள்ளதே தவிர, ஜெயா கோவையிலே உளறியிருப்பதைப் போல விவசாய உற்பத்தி குறைந்து விடவில்லை என்பதை இந்தப் புள்ளி விவரங்களே தெளிவாக்கும்.

மொத்த உணவு உற்பத்தி என்ற அளவில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வகை தானியத்திலும் குறிப்பாக நெல் உற்பத்தியை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட 2000-2001 தி.மு.க. ஆட்சி காலத்தில் நெல் உற்பத்தி 73 லட்சத்து 66 ஆயிரம் டன் என இருந்தது, அதற்குப்பின் வந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2001-2002-ல் 65 லட்சத்து 84 ஆயிரம் மெட்ரிக் டன் எனவும், 2002-2003-ல் 35 லட்சத்து 77 ஆயிரம் மெட்ரிக் டன் எனவும், 2003-2004-ல் 32 லட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் எனவும், 2004-2005 -ல் 50 லட்சத்து 62 ஆயிரம் மெட்ரிக் டன் எனவும், 2005-2006-ல் 52 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் எனவும் குறைந்துவிட; 2006-ல் அமைந்த கழக ஆட்சி விவசாயிகளுக்கு அளித்த ஊக்கம் காரணமாக நெல் உற்பத்தி 2006-2007-ல் 66 லட்சத்து 11 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்து 2009-2010-ல் 71 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் எனவும் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

இதைப்போலவே, சிறு தானிய உற்பத்தியிலும், பயறு வகைகள் உற்பத்தியிலும் அ.தி.மு.க. ஆட்சியைவிட கழக ஆட்சி காலத்தில்தான் உற்பத்திகள் அதிகரித்துள்ளன என்பதை புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. உண்மை இவ்வாறு இருக்க பொய்மையே வடிவாக விளங்கக்கூடிய அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா கோவையில் சொல்லியிருப்பது மொத்தம் புளுகு மூட்டை என்பதை உணர்ந்து கொள்ள மாட்டார்களா தமிழக மக்கள்?.

விவசாயப் பொருள்கள் உற்பத்தியைப் பெருக்குவதில் உரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தேவையான உரம் தமிழக விவசாயிகளுக்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தைவிட அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 20 முதல் 24 லட்சம் மெட்ரிக் டன்கள் யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2001-2002 முதல் 2005-2006 வரை அ.தி.மு.க. ஆட்சியில் ஐந்தாண்டுகளில் சராசரியாக 7.3 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 2.24 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 2.94 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 3.54 லட்சம் மெட்ரிக் டன் காம்ப்ளெக்ஸ் உரமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 2006-2007 முதல் 2009-2010 வரை கடந்த நான்காண்டு தி.மு.க. ஆட்சியில் சராசரியாக 9.88 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 3.43 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 4.99 லட்சம் மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 3.93 லட்சம் மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

2001-2002 முதல் 2005-2006 வரையிலான ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் விநியோகம் செய்யப்பட்ட உரங்களைவிட 2006-2007 முதல் 2009-2010 முடிய கடந்த நான்காண்டு தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக உர விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது யூரியாவில் 2.54 லட்சம் மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 1.19 லட்சம் மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் உரத்தில் 2.05 லட்சம் மெட்ரிக் டன்னும் காம்ப்ளெக்ஸ் உரத்தில் 0.40 லட்சம் மெட்ரிக் டன்னும் கூடுதலாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் முக்கிய இடுபொருளான உரங்கள் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டு தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியை மேம்படுத்துவதில் கழக அரசு கவனம் செலுத்தியுள்ளது என்பதுதானே உண்மை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+