சென்னையில் அட்டகாசம்-'கோர்ட்' நடத்தி கட்டப் பஞ்சாயத்து செய்த 'நீதிபதி, இன்ஸ்பெக்டர்' கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோர்ட் போல ஒன்றை செட்டப் செய்து, அதில் தீர்ப்பு கூறி கட்டப் பஞ்சாயத்து செய்த நீதிபதி மற்றும் போலீஸ்காரர்கள் போல நடந்து கொண்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கட்டப் பஞ்சாயத்துக்காரர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த சட்டவிரோத செயல்பாடுகளால் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பலர் தற்கொலை முடிவுக்கு போகின்றனர். இதைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து குவிந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் சினிமாவில் வருவது போல ஒரு சட்டவிரோத கோர்ட்டை ஏற்படுத்தி அதில் தீர்ப்பு கூறி கட்டப் பஞ்சாயத்து செய்துவந்த கோஷ்டியை போலீஸார் பிடித்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் போஸ்கோ. ஆதம்பாக்கம் புனித மாற்கு கிறிஸ்தவ ஆலய பங்குப்பேரவையில் உதவி தலைவராக உள்ளார். இவர் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில்,

நான் புனித மாற்கு ஆலய பங்குப்பேரவையில் உதவி தலைவராக உள்ளேன். எங்கள் பங்கு பேரவையில் வேளச்சேரியை சேர்ந்த லூர்துசாமி, ஆதம்பாக்கத்தை சேர்ந்த செபாஸ்டின் என்ற செழியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தார்கள். பங்கு பேரவைக்கு சட்டவிரோதமாக நடந்ததால் 2 பேரையும் பங்கு பேரவையில் இருந்து நீக்கிவிட்டோம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லூர்துசாமி, செபாஸ்டின் ஆகிய இருவரும் என்னையும், பங்கு தந்தையையும் தொலைத்து கட்டுவோம், கொல்லாமல் விடமாட்டோம் என்று மிரட்டினார்கள்.

நாங்கள் மக்கள் காவல் நிலையம் நடத்துகிறோம் என்றும், செந்தமிழ்க்கிழார்தான் அதற்கு அகில இந்திய நீதிபதி என்றும், செந்தமிழ்க்கிழார் கடிதம் மூலம் அனைத்து பத்திரிகைகளிலும் உங்களை பற்றி செய்தி வெளியிட வைப்பேன் என்றும், பத்திரிக்கையில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த செந்தமிழ்க்கிழார் என்பவர் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மோசடி ஆசாமி. இந்த நபர், போலியாக நீதிமன்றம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டோர் கழகம் என்ற பெயரிலும் ஒரு அமைப்பை வைத்துள்ளார். இதேபோல மேலும் பல சட்டவிரோதமான அமைப்புகளை நடத்தி கட்டப் பஞ்சாயத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த செந்தமிழ்க்கிழாரின் லெட்டர்ஹெட் தாளில், சம்பளம் வாங்காதவர்கள் நடத்தும் தனி சர்க்கார், தற்காலிக தலைவர், பாதிக்கப்பட்டோர் கழகம், தற்காலிக ஆசிரியர், நீதியைத் தேடி பத்திரிகை மற்றும் சிறப்பு மக்கள் நீதிமன்ற தலைவர், அரும்பாக்கம் என உள்ளது.

இந்த பலே ஆசாமி தன்னை அகில இந்திய நீதிபதியாக கூறி ஆட்டம் போட்டு வந்துள்ளார். மேலும், தனது அமைப்பில் சேருபவர்களுக்கு இன்ஸ்பெக்டர், உதவி எஸ்.பி என சகட்டுமேனிக்கு பதவிகளையும் வாரிக் கொடுத்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையும், காவல்துறை சட்டத்தையும் காலில் போட்டு மிதித்துள்ளார்.

அதேபோல இன்னொரு ஆசாமியான லூர்துசாமி தனது விசிட்டிங் கார்டில் நீதியைத்தேடி ரிப்போர்டர், வேளச்சேரி, மக்கள் காவல் நிலைய ஆய்வாளர் என்று குறிப்பிட்டு இருந்தார். இவருக்கு செபாஸ்டின் கூட்டு.

இந்தக் கும்பலின் வேலை என்னவென்றால் தினசரி காலையில் நாளிதழ்களைப் படிப்பார்கள். அதில் ஏதாவது தங்களுக்கு வசதியானசெய்திகள் இருப்பதைப் பார்த்து சம்பந்தப்பட்ட நபர்களை அணுகி, தாங்கள் தனி தண்டனை சட்டம் வைத்து தனி நீதிமன்றம் மற்றும் தனி அரசாங்கம் நடத்துவதாகவும், இந்தியாவின் சிறப்பு நீதிபதியாக செந்தமிழ்க்கிழார் இருப்பதாகவும் கூறுவார்கள். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதாகவும் சொல்வார்கள்.

அதன் பின்னர் அந்த நபர்களுக்கு எதிரானவர்களை அணுகி பணம் கேட்டு மிரட்டுவார்கள். பணம் தராவிட்டால் பேப்பரில் செய்தி போடுவோம், தண்டனை வாங்கித் தருவோம் என்று மிரட்டுவார்கள்.

இப்படி பகிரங்கமாக மிகப் பெரிய அளவில் கட்டப் பஞ்சாயத்து செய்து வந்துள்ளனர் செந்தமிழ்க்கிழார் தலைமையிலான இந்த சட்டவிரோதக் கும்பல்.

இதையடுத்து 65 வயதாகும் கிழார், லூர்துசாமி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கும்பலில் இன்ஸ்பெக்டர்கள் போல செயல்பட்டுக் கொண்டிருந்த பலர் தலைமறைவாகி விட்டனர். அவர்களுக்கும் போலீஸார் வலை வீசியுள்ளனர்.

இந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த அனைவைரயும் ஒருவர் விடாமல் பிடிப்போம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+