தாமிரபரணியில் விழுந்து உயிர் நீத்த 16 தொழிலாளர்களுக்கு நாளை அஞ்சலி
நெல்லை: நெல்லையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பலியான நாளையொட்டி அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் தாமிரபரணி ஆற்றில் நாளை (23ம் தேதி) அஞ்சலி செலுத்துகின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி கூலி உயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நெல்லை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றபோது கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். அப்போது தப்பிக்க முயன்ற தொழிலாளர்களில் பலர் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். அதில் 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆற்றில் உயிர் நீத்தவர்களுக்கு 11 ஆண்டாக நாளை 23ம் தேதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
17 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆற்றில் அஞ்சலி செலுத்துகின்றனர். ஒவ்வொரு கட்சியினருக்கும் அஞ்சலி செலுத்த தனித் தனியே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நெல்லை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றங்கரை, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், தலைவர்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள், கட்சி அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
வெளியூரில் இருந்து கட்சியினர் நெல்லைக்கு அஞ்சலி செலுத்த வரும் வழியில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications